'மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது'! பாட்டுடைத் தலைவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
சென்னை: பாட்டுடைத்தலைவன் மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றித் தான் இன்றைய Throw back stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள், ஏப்ரல் 13ஆம் தேதியான நாளை வரும் நிலையில் அவர் பற்றிய ஒரு சிறிய மீள்பார்வை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் என்ற கிராமம் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பூர்விகமாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கலப்பையை தூக்கிக் கொண்டு கழனிக்கு சென்ற இவர் கூடவே கவிதைகளையும் புனையத் தொடங்கினார்.
பிற்காலத்தில் பாமரர்களின் பாட்டுடைத் தலைவனாக மிளிர தொடங்கினார். மாடு மேய்த்தது, முறுக்கு விற்றது, உப்பளத்தில் வேலை செய்தது, என தனது 19 வயது வரை பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் பார்க்காத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம்.
இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் கஷ்ட நஷ்டங்களை கண்கூடாக பார்த்து வளர்ந்து அதனை பாடமாக பயின்ற பட்டுக்கோட்டையார், 19 வயதில் பாட்டெழுத தொடங்குகிறார். பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுமிக்கவராக திகழும் இவர், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலாக பாடல் வரிகளில் புரட்சியை நிகழ்த்தினார்.

திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை பெறுவதற்காக சென்னைக்கு வரும் இவர் வாய்ப்புக்காக ஆரம்பக்காலத்தில் அலையாய் அலைந்தார்.
பாசவலை திரைப்படத்தில் பாட்டெழுத இளைஞனான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு தரப்படுகிறது. எம்.எஸ்.விஸ்வநாதன் மிகுந்த சந்தேகத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்தித்தோடு, இந்தப் பையனுக்கு சரியாக பாட்டெழுத வருமா, டியூன் கம்போஸ் ஆகுமா என்றெல்லாம் எம்.எஸ்.வி. தயங்கியிருக்கிறார்.
''குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்; குள்ளநரி மாட்டிக்கிட்ட குறவனுக்கு சொந்தம்'' என ஆன் தி ஸ்பாட்டில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிக் கொடுத்த பாடல் பல்லவியை கண்டு எம்.எஸ்.விஸ்வநாதனே வியந்துபோய் பட்டுக்கோட்டையார் கரங்களை பற்றி வாழ்த்தியிருக்கிறார்.
அவர் வாழ்த்து பொய்யாகவில்லை, அதன் பிறகு திரையுலகில் விறுவிறுவென உச்சம் தொடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி அளித்த பேட்டி ஒன்றில், தானும் தனது கணவர் பட்டுக்கோட்டையாரும் சென்னை ராயப்பேட்டையில் வசித்தபோது, போட்டி போட்டுக் கொண்டு தனது கணவரை பாட்டெழுதுவதற்காக அழைத்துச் செல்ல வீடு தேடி கார்கள் வரும் என்கிறார்.

எந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் வாகனம் முதலில் வருகிறதோ அதில் ஏறி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சென்றுவிடுவார் என்றும் தாமதமாக கார் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனவும் தெரிவித்துள்ளார் பட்டுக்கோட்டையார் மனைவி கவுரவாம்பாள். மேலும் தனது கணவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு ராயப்பேட்டை பொன்னுச்சாமி கடை சோறு என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது, கையிலே வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியல, திருடாதே பாப்பா திருடாதே, என பட்டுக்கோட்டையார் கைவண்ணத்தில் உருவான பாடல்களை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஆழமான சிந்தனையும், கருத்துச்செறிவும் மிக்கவையாக இருக்கும்.
சினிமாவில் இவர் பாட்டெழுதியது 10 ஆண்டுகள் மட்டுமே என்றாலும், இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் அவர் புகழ் பாடும். தனது 29வது வயதில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் என்றும் தனது பாடல்களால் வாழ்வார், வாழ்ந்து கொண்டிருப்பார்.












Click it and Unblock the Notifications