குடும்பத்தோடு குற்றாலம் போன சமயத்தில்... 2 மணி நேரம் சூறையாடப்பட்ட பால்.கனகராஜ் வீடு!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜின் வீடு கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்த கொள்ளையடித்த நபர்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் கொள்ளையர்கள் வீட்டில் இருந்து சூறையாடியுள்ளனர்.
பால் கனகராஜின் வீடு வேப்பேரியில் உள்ளது. அங்குள்ள ரித்தர்டன் சாலையில்தான் வீடு உள்ளது. தற்போது உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து தனது குடும்பத்துடன் கேரளாவுக்கும், குற்றாலத்திற்கும் சுற்றுலா சென்றிருந்தார் கனகராஜ்.

வீட்டில் யாரும் இல்லை. நேற்று காலை அவரது உதவியாளர் இம்மானுவேல், கனகராஜின் வீட்டிற்கு வந்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். அதேபோல முதல் மற்றும் 2வது தளத்தில் உள்ள கனகராஜின் வீடுகளின் அறைகளும் திறந்து கிடந்தன. வீடே சூறையாடப்பட்டுக் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பால் கனகராஜுக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார். வீடே சூறையாடப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
- வீட்டிலிருந்த அனைத்து பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது. நகை பெட்டிகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
- கொள்ளையர்கள் மொத்தம் 6 கதவுகளை கடப்பாரையால் உடைத்திருந்தனர். பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
- தனது வீட்டில் நகைகள் கொள்ளை போயிருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனகராஜ் கூறியுள்ளார்.
- வீட்டிற்கு வந்து பார்த்த பிறகே எவ்வளவு நகைகள் போயிருக்கின்றன என்று தெரிய வரும் என்றும் கனகராஜ் கூறியுள்ளார்.
- கொள்ளை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது.
- அவர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து சூறையாடலில் இறங்கியுள்ளனர். எல்லாமே தெளிவாக பதிவாகியுள்ளது
- கொள்ளையர்கள் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
- ஒரு கொள்ளையனுக்கு தலையில் வழுக்கை உள்ளது.
- நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அதிகாலை 3 மணி வரை இருந்து பொருட்களை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
- கொள்ளையர்களில் ஒருவன் முதலில் அலுவலகத்திற்குள் சென்றுள்ளான்.
- இன்னொரு கொள்ளையன் வீட்டின் முதல் தளத்திற்கும், 2-வது தளத்திற்கும் சென்றுள்ளான்.
- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் இருந்த பெரிய பையில் போட்டு கொண்டு போயுள்ளனர்.
- கொள்ளையர்கள் கையில் டார்ச்லைட், சிறிய கத்தி மற்றும் கடப்பாரை ஆகியவற்றை வைத்துள்ளனர்.
- கனகராஜ் தனது வீட்டில் பெரிய அளவில் நகைகளை வைத்திருக்கவில்லை. அவரது தாயாரின் நகைகள், கம்மல் போன்றவைதான் இருந்ததாம்.
- 6 விலை உயர்ந்த கை கடிகாரங்கள், பட்டுபுடவைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
- மொத்தத்தில் ரூ.10 முதல் 15 லட்சம் வரையிலான பொருட்கள் கொள்ளை போயிருக்கலாம் என்று பால் கனகராஜ் கருதுகிறார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக மட்டுமல்லாமல் தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் கட்சியையும் நடத்தி வருகிறார் பால் கனகராஜ். இவரது அண்ணன் பால் வசந்தகுமார், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனகராஜ் வீட்டில் நடந்த கொள்ளையர்களின் சூறையாடல் சென்னை காவல்துறைக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications