ரஜினியை கண்டு அரசியல்வாதிகளுக்கு அச்சம்... பழ.கருப்பையா பொளேர்
Recommended Video
சிவகங்கை: நடிகர் ரஜினிகாந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை கண்டு அரசியல்வாதிகள் அச்சப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இருக்கும் எந்த தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்றும், அதனால் மக்கள் செல்வாக்கு இருக்கிறவர்களை பார்த்தால் மிரள்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ், அதிமுக, திமுக, என பல கட்சிகளில் இருந்த பழ.கருப்பையா இப்போது தனது இலக்கியப் பணிகளை மட்டும் கவனித்து வருகிறார். காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதனைக் கூறினார்.

ரஜினிகாந்த் தவறான கருத்தைக் கூறினால் அதற்காக அரசியல்வாதிகள் போராடவே தேவையில்லை, மக்களே அவரை புறக்கணித்துவிடுவார்கள் என்றும், திராவிடத்தை உயர்த்தி பிடித்த பெரியார் ஆரியத்தை இழிவுப்படுத்த நினைத்தது ஒன்றும் குற்றமான செயலல்ல எனவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சமூக விழிப்புணர்வு வேண்டி பெரியார் செய்த காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து விலகி சுமார் இரண்டு மாத காலம் அமைதியாக இருந்த பழ.கருப்பையா இப்போது மீண்டும் அரசியல் தொடர்பாக கருத்து கூறத் தொடங்கியுள்ளார். ரஜினிகாந்துக்கு ஆலோசனை கூறும் வட்டத்தில் பழ.கருப்பையாவும் இணைய உள்ளார் என்றும், அதனால் தான் அவர் திமுகவை உதறிவிட்டு வெளியேறினார் எனவும் அப்போது கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையிலேயே பழ.கருப்பையாவின் பேட்டிகளும், கருத்துகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு இணையாக தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்ற பழ.கருப்பையாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஜினி தொடங்கும் புதிய கட்சியில் பழ.கருப்பையாவுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications