இதுதான் தமிழ்நாடு.. வேறு மாநிலத்தில் நீட் எழுதும் மாணவர்களுக்காக உதவிக்கரம் நீட்டும் மக்கள்!
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவ தமிழர்கள் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவ தமிழர்கள் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கிறார்கள். பயண செலவு தொடங்கி தங்குமிடம், உணவு வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்குவேறு மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா, குஜராத், உபி எல்லாம் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

பெரிய கஷ்டம்
இது மாணவர்களுக்கு பெரிய சிரமத்தை உருவாக்க போகிறது. திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மாணவி நீட் எழுத ராஜஸ்தான் செல்ல வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. இனி ரயில் புக் செய்து செல்ல முடியாது, தட்கலில் கிடைப்பதும் உறுதியானது கிடையாது. அப்படியே முன்பே முன்பதிவு செய்து இருந்தாலும் 30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிக பணம் கொடுத்து விமானத்தில் செல்ல வேண்டும். இவ்வளவு கஷ்டங்களைத்தான், மத்திய அரசின் சிபிஎஸ்இ போர்ட் தமிழக மாணவர்களுக்கு பரிசளித்து இருக்கிறது.

சேர்ந்தார்கள்
ஆனால் போராட்ட குணம் தானே தமிழர்களின் பலம். இந்த முறை போராட்டத்தோடு முடித்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள். அதன்படி நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய முன் வந்து இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள், நாங்கள் செய்கிறோம், இத்தனை பேருக்கு நாங்கள் உதவ முடியும் என்று எல்லோரும் ஒன்றாக திரண்டு உதவிக்கு வந்துள்ளனர்.

எத்தனை எத்தனை கரங்கள்
ஒருவர் இருவர் என்று இல்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் டிவிட்டரில், பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப் குழுக்களிலும் இப்படி உதவிக்காக வந்து இருக்கிறார்கள். மத்திய அரசின் குரூரமான மனப்பான்மையால் எந்த மாணவனின் கல்வியும் தடைபட்டுவிடக் கூடாது என்ற தார்மீக கோபத்துடன் ஒவ்வொருவரும் உதவிக்கு கிளம்பி இருக்கிறார்கள். இந்த நீட் தேர்வு சத்தமே இல்லாமல் ஒரு மௌன புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு தூக்கம்
நீட் தேர்வுக்காகத்தான் வாதாடி வெல்ல முடியவில்லை, தேர்வு மையத்திற்காக வாதாடி வெல்ல முடியவில்லை என்றால் இப்போது இதிலும் கூட தமிழகஅரசு மக்கள் பக்கம் நிற்கவில்லை. தனி மனிதர்கள் பணம் கொடுத்து விமான செலவிற்கு ஏற்பாடு செய்யும் போது, அரசு இதுவரை மாணவர்களின் பயணத்திற்கு உதவுவோம், அவர்கள் தங்குவதற்கு உதவுவோம் என்று கூறி முன்வரவில்லை. மக்கள் மட்டுமே மக்களுக்கு உதவ வேண்டும், அரசு எதுவும் செய்யாது மக்களை மக்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான், இந்த மக்களாட்சி போல!












Click it and Unblock the Notifications