10,000க்கும் அதிகமான "சமூக விரோதிகள்" கலகத்தை ஏற்படுத்தினார்கள்... எப்ஐஆர் கூறுகிறது
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை வட்டாட்சியர் விளக்கியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்து இருந்தார். தற்போது இந்த துப்பாக்கி சூட்டை நடத்த ஆணையிட்டது யார், என்ன காரணமாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

யார் காரணம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என எப்ஐஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தையும் அதில் விளக்கியுள்ளனர்.

போராட்டம்
தூத்துக்குடியில் 10,000க்கும் அதிகமான "சமூக விரோதிகள்" கலகத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினார்கள். கலைந்து செல்லும்படி கூறியும் செல்லவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் யாரும் செல்லவில்லை. "சமூக விரோதிகள்" கலைந்து செல்லவே இல்லை.

கண்ணீர் புகை
கண்ணீர் புகை குண்டு, லத்தி சார்ஜ், ரப்பர் குண்டு என எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் மக்கள் கலையவில்லை. கலவரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரிவாள், கத்தி, கம்புகளுடன் மக்கள் போலீசை தாக்கினார்கள். அரசு அலுவலகத்தை பெட்ரோல் குண்டுகளுடன் மக்கள் முற்றுகையிட முயற்சித்தார்கள்.

கொலை முயற்சி
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள். திரேஸ்புரத்தில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் கலவரம் செய்தனர். 100 பெண்கள் உட்பட 500 பேர் வரை காவல் நிலையத்தில் நுழைய முயன்றனர். கலவரக்காரர்கள் போலீசாரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் பிரச்சனையாகும் என்று துப்பாக்கி சூடு நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தூத்துக்குடி துணை வட்டாச்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications