ரூபாய் மாற்றம்... அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகள் "பெட்டர்"... மக்கள் கருத்து
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருவதில் அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகளின் சேவை நன்றாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
சென்னை: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருவதிலும், இதர சேவைகளிலும், அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகளின் சேவை எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேவை சரியில்லை என்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக இந்தியன் வங்கியின் கிளைகள் மீதுதான் மக்கள் கடும் அதிருப்தியைக் கொட்டுகின்றனர்.
தனியார் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் விரைவான சேவை வழங்குவதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேவைகள் திருப்திகரமாக இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.

சொன்னபடி நடப்பதில்லை
அதேபோல அரசு அறிவித்தபடி வங்கிகள் நடந்து கொள்வதில்லை என்பதும் மக்களின் இன்னொரு குற்றச்சாட்டாக உள்ளது. அதாவது மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்கிகாந்த தாஸ் கூறுகையில், பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் மாற்றிக்கொள்ளலாம் என்பது ரூ.4,500 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

வாக்குவாதம்
ஆனால் நேற்று பெரும்பாலான வங்கிகளில் வழக்கம்போல ரூ.4,000 மட்டுமே கொடுத்தனர். சில வங்கிகளில் அதுவும் குறைந்து ரூ. 2000 மட்டுமே தரப்பட்டது. அரசு உத்தரவைக் கூறிக் கேட்டாலும் வங்கி ஊழியர்கள் தர மறுத்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

பணப் பற்றாக்குறை
ஏடிஎம் மையங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களையும், ரூ. 2000 நோட்டுக்களையும் நிரப்பாமல் உள்ளனர். மேலும் 100 ரூபாய், 50, 20, 10 ரூபாய் தாளுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையும் போதிய அளவுக்கு நிரப்பினால் மட்டுமே மக்களின் பேரவலம் குறையும் என்று கூறப்படுகிறது.

ஏடிஎம்மிலேயே எல்லாம் கிடைத்தால் நல்லது
ஏடிஎம்மிலேயே எல்லாம் கிடைத்து விட்டால் மக்கள் வங்கிகளுக்குப் போய் குவிவது குறையும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் ஏடிஎம்மை பற்றி அரசு உரிய முறையில் அக்கறை காட்டவில்லை, அதில் சரியான திட்டமிடல் இல்லை என்பது மக்களின் கருத்தாகும்.

போதிய பணத்தை நிரப்பாதது ஏன்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கும் இன்னும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்படாததும், ஏ.டி.எம். மையங்களில் போதுமான அளவு பணம் நிரப்பப்படாததும் தான் இதற்கு காரணம்.

நீண்ட வரிசை.. அலையும் மக்கள்
ஏ.டி.எம்.களில் நேற்று முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பிய சில மணி நேரங்களிலேயே காலியானது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க நீண்ட வரிசை காணப்பட்டது. பகலிலேயே பணம் தீர்ந்துவிடுவதால், இரவில் பல ஏ.டி.எம்.களிலும் பணம் இருப்பதில்லை.

மொபைல் ஏடிஎம் மையங்கள்
மக்களின் பணத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். மையங்களை பிரதான வங்கிகள் நிறுத்தியிருந்தன. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று பணம் எடுத்துச்சென்றனர். அதேசமயம், பிற பகுதிகளில் இவற்றைக் காண முடியவில்லை.

புது நோட்டு வந்தால் சீரடையும்
இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 2,000 ரூபாய் நோட்டுகளும் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிலைமை சகஜமாகலாம் என்று எதிர்பரார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
