காரைக்குடியை மிரள வைத்த பேய் மழை.. வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி! மிதந்த உடல்!
காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டர் என்பவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிக கனமழை பெய்தது. காரைக்குடி நகர்ப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் இரு சக்கர வாகனங்களும் மழை நீரில் மூழ்கின. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காரைக்குடி செக்காலை ரோட்டில் இருந்து மழைநீர் ஐந்து விளக்கு, கண்ணன் பஜார், டெலிபோன் எக்ச்சேஞ்ச் வழியாக கொப்புடை அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கும், அங்கிருந்து மடை வழியாக காரைக்குடி நாட்டார் கண்மாய்க்கும் மழைநீர் செல்கிறது. ஆனால் கண்ணன் பஜார், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் ஆக்கிரமிப்புகளாலும், கால்வாய் நீண்ட காலம் தூர்வாரப்படாதாலும் தாழ்வான பகுதி என்பதால் கண்ணன் பஜாரில் அமைந்துள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில், காரைக்குடியில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் ஒருவர் மூழ்கி பலியாகியுள்ளார். காரைக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளத்தில் மூழ்கி பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான பீட்டர் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











Click it and Unblock the Notifications