இங்கிலீசில் தீர்ப்பு... ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரிய கொலைக் குற்றவாளியின் மனு தள்ளுபடி
சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்ததால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவா, உள்பட 16 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு தெரியாத மொழியில் நீதிபதி தீர்ப்பளித்ததாகக் கூறி, தண்டனை பெற்ற ஜீவாவின் உறவினர் சுகன்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 353 (சி)- யின்படி குற்றவாளிக்கு தெரிந்த மொழியில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும். ஆனால், 16 பேருக்கு தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய தீர்ப்பை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். எனவே, இந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும். சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்' என சுகன்யா தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில், " ஒரு வழக்கில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கினால், அதை எதிர்த்து மேல்முறையீடுதான் செய்ய முடியுமே தவிர ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது. மேலும் கீழ் கோர்ட்டு நீதிபதி, வழக்கு விசாரணை அனைத்தையும் தமிழ் மொழியில்தான் நடத்தியுள்ளார்.
தண்டனை விவரங்களை குற்றவாளிகளிடம் கேட்டு, அவர்களது பதிலையும் தீர்ப்பில் தமிழில் பதிவு செய்துள்ளார். மேலும் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 353(சி)-க்கு எதிராக தீர்ப்பு அளித்ததற்காக, அந்த தீர்ப்பையே செல்லாது என்று கூறமுடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications