15 லோக்சபா தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள்.. நாளை ராமதாஸ் அறிவிக்கிறார்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலி்ல தனித்துப் போட்டியிடும் பாமக, தான் போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாளை வெளியிடுகிறது.
வட மாவட்டங்களிலிருந்து இந்த 15 தொகுதிகளையும் பாமக தேர்வு செய்துள்ளது. மேலும் புதுச்சேரி தொகுதியிலும் அது என்.ஆர். காங்கிரஸ் ஒத்துழைப்புடன் போட்டியிடுகிறது.
இதில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் தர்மபுரி அல்லது புதுச்சேரியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அவர் தவிர, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி, ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, சேலத்தில் இரா.அருள், அரக்கோணத்தில் ஆர்.வேலு, மயிலாடுதுறையில் அகோரம், திருவள்ளூரில் பார்த்தசாரதி, திருவண்ணாமலையில் எதிரொலி மணியன், கடலூரில் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
புதுச்சேரிக்கு முன்னாள் எம்.எல்.ஏ அனந்தராமன் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ், தர்மபுரியில் போட்டியிட்டால் புதுவையில் அனந்தராமன் போட்டியிடலாம்.
நாளை முற்பகல் 11 மணிக்கு வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் அறிவிக்கிறார். முதலில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தனது தலைமையில் உருவாக்கப்படும் சாதிக் கூட்டணியின் பெயரையும் டாக்டர் ராமதாஸ் நாளை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தான் போட்டியிடாத இடங்களில், தனது கூட்டணியில் இடம் பெறும் சாதிக் கட்சிகள், அமைப்புகளுக்கு பாமக ஆதரவு தருமாம்.












Click it and Unblock the Notifications