ராமதாசுக்கு நாக்குதான் முதல் விரோதி: கருணாநிதி
சென்னை: திமுக தூண்டுதலால் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாமகவினரைத் தாக்குவதாக ராமதாஸ் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார். ராமதாசுக்கு நாக்குதான் முதல் விரோதி என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக தேவையில்லாமல் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து வருவதாகவும் கருணா்நிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கெட்ட பழக்கம்
சமீபகாலமாக தேவையில்லாமல் விமர்சனம் செய்யும் கெட்ட பழக்கம் ராமதாசுக்கு வந்துவிட்டது. திமுக தூண்டுதலால் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாமகவினரைத் தாக்குவதாக ராமதாஸ் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தூண்டி விடுவதுதான் எங்கள் வேலையா
ராமதாஸின் நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் எதுவும் சொல்வதில்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளை தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா?

பாமகவை வன்முறை இயக்கம் என்றது அதிமுகதான்
அதிமுக ஆட்சியில் பாமகவினர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டன. கடந்த 1992-ஆம் ஆண்டில் பாமகவை வன்முறை இயக்கம் என குறிப்பிட்டு அதிமுக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியபோது அதனை நான் எதிர்த்தேன்.

நாக்குதான் முதல் விரோதி
திமுக ஆட்சியில் தான் அம்பேத்கரின் புகழ் உயர்த்தப்பட்டது. ஆனால், திமுக தூண்டுதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது என்று ராமதாஸ் கூறுகிறார். சில பேருக்கு நாக்கு தான் முதல் விரோதி என்று கூறியுள்ளார். இதேபோல கேள்வி பதில் வடிவிலான மற்றொரு அறிக்கை ஒன்றில், அவர் கூறியுள்ளதாவது:

குறை கூறி வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் மீது குறைகூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

மன வேதனை தருகிறது
அண்மைக் காலமாக நீதிபதிகள் பற்றியும், அவர்களின் நியமனம் குறித்தும் வெளிவரும் செய்திகள் மனவேதனையை அளிக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

நீதித்துறைக்கே களங்கம்
நீதிமன்றத்தில் வாதாடி பழக்கமே இல்லாதவர்களின் பெயர்கள் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரே, பரிந்துரைப் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. ஒரு சில நீதிபதிகள் மீது வரும் குற்றச்சாட்டுகளால் நீதித் துறையின் மீதே களங்கம் ஏற்பட்டுவிடும்.

கங்கையே சூதகமானால்
மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது என்று தேவர் திருமகன் அடிக்கடி கேட்டதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

மத்திய அரசு பாராமுகம்
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதோடு ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமரே நேரடியாக அந்தப் படங்களைப் பார்த்து இலங்கை அரசைக் கண்டித்துள்ளார்.
ஆனால், உண்மையில் குரல் கொடுக்க வேண்டிய மத்திய அரசானது, பட்டும் படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

குமரியில் போராட்டம்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நடத்தாத சுற்றுலாத் துறையைக் கண்டித்து குமரி மாவட்ட திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிலையைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் அரசு செயல்பட்டால் அதனைத் தடுக்க குமரி மாவட்ட திமுக போராட்டம் நடத்தும்.












Click it and Unblock the Notifications