புதுச்சேரியில் பாமக– விடுதலை சிறுத்தைகள் மோதல்… துப்பாக்கிச் சூடு பதற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனரை கிழித்தனர்.
இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபப்படுத்தியது. பா.ம.க தொண்டர்கள் கலைந்து சென்ற சில மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கடந்த சில நாட்களாகவே பேனர் கிழிப்பு, தலைவர்களின் சிலைகளை உடைப்பது என தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த வாரம் புதுச்சேரி மதகடிப்பட்டில் பாமக மற்றும் வன்னியர் அமைப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலை இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து பாமக மற்றும் வன்னியர் அமைப்பை சேர்ந்தவர்கள் மதகடிப்பட்டு மற்றும் பத்துக்கண்ணு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் திருபுவனை போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் சிலையை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததுடன், மீண்டும் சிலையை புதுப்பித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் பேனர் கிழிப்பு சம்பவங்கள் அரங்கேறி பதற்றத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
