காவிரி பிரச்சினைக்கு காரணமே நீங்கதான்.. திமுகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் பதிலடி
விவசாயிகள் பிரச்சனைக்கு திமுகதான் காரணம். இந்த முழு அடைபுப் போராட்டம் அணி திரட்டும் சுயநல முயற்சி. அதனால் பாமக முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: வரும் 25ஆம் தேதி நடக்கவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிக்காது. காரணம் இது திமுகவின் அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர விவசாயிகளை காப்பதற்கான முயற்சி அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர விவசாயிகளை காப்பதற்கான முயற்சி அல்ல என்பதே பாமகவின் கருத்து.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் பாமக ஆதரிக்கிறது.

திமுக தான் விவிசாயிகளின் பிரச்சனைக்கு காரணம்
ஆனால், எந்த அடிப்படையில் விவசாயிகளுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே திமுக தான். 1924-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970-ம் ஆண்டுகளில் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதை தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணமாகும்.

மக்கள் பாதிப்படைவார்களே!
ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுறமிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

விவசாயிகளை மக்கள் தூற்றுவார்கள்
அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் கோர முடியும். விவசாயிகளின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் விவசாயிகளைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

முழு அடைப்பு அரசியல் கூட்டணி முயற்சி
விவசாயிகளின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பாமக ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்று பாமக உறுதியாக நம்புகிறது.

பாமக பங்கேற்காது
எனவே, இந்த போராட்டத்தில் பாமகவும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாமக நட்புடன் கேட்டுக்கொள்கிறது'' - இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications