புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு
புதுக்கேட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தடிகொண்ட அய்யனார் கோவில் திடலில் அப்பகுதி மக்கள் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முயன்றனர். இதற்காக அவர்கள் தற்காலிக வாடிவாசலை அமைத்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். இதனை தடுக்க முயன்ற காவல்துறையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாடிவாசலை அகற்றினர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்த காவல்துறையினர், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் தடியடியால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications