தேனியில் இருபிரிவினரிடையே மோதல்- ஒருவர் பலி! போலீஸ் கண்ணீர்புகை குண்டு வீச்சு- துப்பாக்கிச் சூடு!!
தேனி: தேனியில் இரு பிரிவினரிடையே இன்று மோதல் வெடித்ததில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தேனியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தேனி மாவட்ட அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலர் தமிழன். தேர்வு ஒன்றுக்காக நேற்று பெங்களூரு சென்ற போது அவர் உயிரிழந்தார். எஸ்.ஆர். தமிழனின் இறுதி ஊர்வலம் தேனி தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே தொடங்கியது.

இறுதி ஊர்வலம் அல்லி நகர் அருகே சென்ற போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதில், இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதில், ஒரு தரப்பினருக்கு சொந்தமான கடைகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் டிராக்டர் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அவர்கள், காவல் துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு போலீசாருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது.
பின்னர் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலவரக்காரர்களை அடக்க முயற்சித்தனர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் தேனி சுற்றுவட்டாரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications