லுங்கியுடன் மப்டியில் அதிரடி சோதனை.. போலீஸ் பிடியில் சிக்கிய பன்னாரி செக்போஸ்ட்.. கட்டு கட்டாக பணம்!
சோதனை சாவடியில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

ஈரோடு: பன்னாரி சோதனை சாவடியில் மப்டியில் சென்ற போலீசார் அங்கிருந்த போக்குவரத்து சோதனை சாவடியில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணத்தினை கட்டு கட்டாக பறிமுதல் செய்தனர்.
தமிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் பன்னாரியில் காவல்துறை, வனத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக புகார் எழுந்தது.

இந்த புகார்களின் அடிப்படையில் பன்னாரியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் அதிரடி சோதனை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டது. அதற்காக ஈரோடு ஊழல்தடுப்பு கண்காணிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் புஷ்பராஜ், தலைமையிலான போலீசார் இன்று காலை லுங்கி மற்றும் ஒரு துண்டு அணிந்து சோதனை சாவடியினுள் நுழைந்தனர். பின்னர் அங்கு 5 மணிநேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணத்தினை கட்டுகட்டாக போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட சோதனைசாவடி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். இதில் சோதனை சாவடியில் பணியாற்றிய மோட்டார் வாகன ஆய்வாளர் ரமணன் பணிமாறுதல் பெற்று நேற்றுதான் இங்கு பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. சோதனை சாவடியில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications