ஜெ. பங்களாவில் இருந்து சசி, தினகரன் ஆட்கள் வெளியேற்றம்- போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட பங்களாவில் தங்கியிருந்த சசிகலா, தினகரன் ஆட்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் தங்கியிருந்த சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். வேதா நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடு கடந்த 1987 முதல் 30 ஆண்டுகாலமாக பரபரப்பான பகுதியாகவே காணப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேதா நிலையத்தில் பாதுகாப்பு பலமாகவே இருக்கும்.
வேதா நிலையத்திற்குள் மகாராணியைப் போல வலம் வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த வீட்டில் ஜெயலலிதாவிற்கு உதவியாக சசிகலாவும், இளவரசியும், அவரது வாரிசுகளும் இருந்தனர். வெளியாட்கள் யாரும் அத்தனை எளிதில் வேதா நிலையத்திற்குள் நுழைந்து விட முடியாது.

ஜெயலலிதா உடல்நலக்குறைவு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எல்லாமே தலைகீழாகிவிட்டது. சசிகலாவின் உறவினர்கள் சர்வ சாதாரணமாக போயஸ் தோட்ட வீட்டிற்குள் வலம் வந்தனர்.

சடலமாக வந்த ஜெயலலிதா
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் மரணமடைந்தார். உயிரோடு வீட்டை விட்டு வெளியேறிய அவர், சடலமாகவே கொண்டு வரப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

சசி உறவுகள் ஆதிக்கம்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வேதா நிலையம் வந்தது. சில மாதங்களில் அவரும் சிறைக்கு போகவே, சசிகலா குடும்ப உறவுகளே வேதா நிலையத்திற்குள் ஆதிக்கம் செலுத்தினர்.
அதுவும் சில மாதங்கள்தான்.

நினைவில்லம் ஆக்க கோரிக்கை
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவோம் என்று கூறி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு இயக்கத்தை தொடங்கினார். அணிகள் இணைப்புக்கு ஒரு முக்கிய நிபந்தனையாகவும் முன் வைத்தார். அவரது நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

போலீஸ் குவிப்பு
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லம் ஆக்கப்படும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்த சிறிது நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போயஸ்கார்டன் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வேதா இல்லத்துக்குள் யாரும் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாத வகையில் தடுப்புவேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|
24 மணிநேரமும் கண்காணிப்பு
போயஸ்கார்டன் பகுதியில் வசிக்கும் மக்களை தவிர வெளி நபர்கள் அந்த சாலை வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். தியாகராயநகர் துணை ஆணையர் மேற்பார்வையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்டு முறையில் போயஸ்கார்டன் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சசி, தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றம்
வேதா நிலையத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வேதா நிலையம் முழுவதையும் போலீஸ் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. நினைவில்லம் ஆக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை அரசு தொடங்கிவிட்டது.

அதிமுக அலுவலகம்
இதேபோல சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயாடிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தையும் அரசு கைப்பற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications