பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கம்.. குழு அமைத்த அரசு.. மக்கள் புகார் தர இலவச எண்கள்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசு விநியோகம், கரும்புகளைக் கொள்முதல் செய்ய மாவட்டம், வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு: தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

ரூ.1000 ரொக்கம்: அதன்படி இந்த ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரிசி ரேசன் கார்டு: ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது.
குழு அமைப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு விநியோகம், கரும்புகளைக் கொள்முதல் செய்ய மாவட்டம், வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதல் குழு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குநர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை அடங்கிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேரடி கொள்முதல்: வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
கண்காணிக்க குழு: இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
புகார் தர எண்கள்: பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications