உதய் திட்டத்தில் கொள்கை அளவில் தமிழகம் இணைகிறது - பியூஸ் கோயல் தகவல்
சென்னை: உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு கொள்கை அளவில் முன்வந்திருப்பதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மின் உற்பத்தி விலையைக் குறைக்கவும், மின் விநியோகத் திறமையை மேம்படுத்தவும், மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையைக் குறைக்கவும் மின் விநியோக அமைப்புகளின் நிதி நிலை, மேலாண்மையை நிலைநாட்டவும் உதய் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மின் திருட்டை கட்டுப்படுத்துவதும், உற்பத்தி விலைக்கேற்ப மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதும் உதய் திட்டத்தின் நோக்கம். மொத்தக் கடனில் 75 சதவீத்தை மாநில அரசு ஏற்க வேண்டும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான அம்சங்கள் உதய் திட்டத்தில் உள்ளன. இதற்கு தமிழக அரசு உடன்படவில்லை என்று கூறப்பட்டது. உதய் திட்டத்தில் பல மாநிலங்கள் இணைந்துள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல். கடந்த ஜூலை மாதம் சென்னை வந்து முதல்வரை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று பேச்சு நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லிக்கு சென்றார். மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேற்று மாலை தங்கமணி சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு முன்வந்திருப்பதாக தெரிவித்தார். உதய் திட்டத்தில் சேருவதற்கு தமிழகம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், இத்திட்டத்தில் இணைந்து பேசி ஒரு நியாயமான தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications