அண்ணாவுக்கும் நாமம்... எம்.ஜி.ஆருக்கும் நாமம்...மக்களுக்கும் நாமம் - இப்படித்தான் பேசினார் பிரேமலதா!
சேலம்: சேலத்தில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
பிரேமலதாவை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அவர் பேசிய பேச்சின் முழுவிவரம் வெளியாகியுள்ளது. அது இதுதான்.

சசிபெருமாள் மரணம்:
" சசி பெருமாள் 30 ஆண்டுகள் மதுவுக்கு எதிராக போராடி, போராட்டக் களத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். அது கொலையா, தற்கொலையா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், இன்று வரை அவர் குடும்பத்திற்கு 1 ரூபாய் கூட நிதி உதவி அளிக்கப்படவில்லை. சிறிய அளவில் அனுதாபம் கூட தெரிவிக்கப்படவில்லை.

மிடாஸ் பேக்டரி ஓனரா அவர்?:
ஒரு மனிதனுடைய போராட்டத்தை நாம் கேலியாக எடுத்துக் கொள்ள முடியாது. அவரென்ன பெரிய மிடாஸ் பேக்டரி ஓனரா? சாதாரண ஒரு குடிமகன். மிகவும் ஏழ்மை நிலையான குடும்பமாக இருந்தாலும், மக்கள் திருந்தனும், நாடு முன்னேறப் போராடினார். அந்தத் தியாகத்திற்கு என்ன மதிப்பிருக்கின்றது இங்கே?

டம்மி சூப்பிரண்ட் ஆப் போலீஸ்:
இதே போன்றுதான் விஷ்ணுப்பிரியா வழக்கும். ஒரு நேர்மையான அதிகாரியான அவருக்கும் இறுதியில் கிடைத்தது தற்கொலைதான். டி.எஸ்.பி என்றால் "டம்மி சூப்பிரண்ட் ஆப் போலீஸ்" என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். குமாரசாமியின் நிலைமை என்ன? நேர்மையான அதிகாரியாக போராடும் சகாயத்தின் நிலைமை என்ன?

நத்தம் விஸ்வநாதன் என்று ஒருவர்:
நத்தம் விஸ்வநாதன் என்று அமைச்சர் ஒருவர் இருக்கிறார். பெண்கள் இங்கே அதிகளவில் இருக்கின்றீர்கள்... உங்களுக்கு இதனை பதிய வைக்க விரும்புகின்றேன் அவர் சட்டசபையில் சொல்கிறார், அந்தக் காலத்தில் ராஜாவிடமே மது வாங்கி அருந்தியுள்ளனர் புலவர்கள். ராஜாக் காலத்தில் குடித்தது போல பெண்கள் இன்றும் குடிக்க வேண்டும் சொல்கிறீர்களா? கலாச்சார சீர்க்கேட்டை திணிக்கும் கருத்தை சட்டசபையில் சொல்கிறார். இதைப் பெண் குலத்தின் முன் கண்டிக்கின்றேன்.

மக்களுக்கு ஜெ. போட்ட பட்டை நாமம்:
முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க என்று அவர்களுக்கும் நாமம் போட்டார்கள். இன்று 110 விதியின் கீழ் ஓட்டுப் போட்ட நமக்கும் நாமம் போட்டு விட்டார்கள். பொன்னேரியில் வாய் கூசாமல் 13 ஆயிரம் கோடி என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். தமிழகமே கடனில் மூழ்கியுள்ளது. ஆனால், இன்றும் 33 வாகனங்களுடன் பவனி வருகின்றார். கேட்டால் ஆளும் அதிமுகவின் மாவட்ட வாரியாக சாதனை பயணம் என்கிறார்.

இதுதான் நிலைமை:
ஆனால், தினம் தினம் மக்கள் பயணம் செய்யும் அரசுப் பேருந்தின் நிலையை உங்களால் சாதனையாக காட்ட முடியுமா? அந்த பேருந்துகளை எப்படித்தான் ஓட்டுனர்கள் ஓட்டுகின்றார்களோ? உங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்கள் அந்தப் பேருந்தில் ஏறி, குழியில் விழுந்து சாகணும். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications