பேட்டி கொடுத்த போதே! "அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்" என தேமுதிகவினர் கோஷம்! பிரேமலதா ரியாக்ஷன் என்ன?
செங்கல்பட்டு: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேட்டிக் கொடுத்து கொண்டிருந்த போதே "அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்" என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது பிரேமலதாவின் ரியாக்ஷன் எப்படியிருந்தது தெரியுமா?
இதுகுறித்து பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: 2026 ஆம் ஆண்டுதான் சட்டசபை தேர்தல் வருகிறது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே (அதிமுக) ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அதனால் வலுவான கூட்டணி அமையும் மாபெரும் வெற்றி பெறுவோம்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் தேமுதிக அதில் இருக்குமா என்பதை ஜோதிடமாக சொல்ல முடியாது. அவங்க சேருவாங்களா, இவங்க சேருவாங்களா என்பதை சொல்ல முடியாது. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கு.
ஒரு வருஷம் கழித்து யார் யார் கூட கூட்டணி அமைக்கிறார்கள், எப்படி கூட்டணி அமைய போகிறது என்பது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தெரிந்து விடும் என பிரேமலதா சொன்னார்.
அப்போது அங்கிருந்த தொண்டர்கள், "தயவு செய்து அதிமுகவுடன் கூட்டணி தேவையில்லை" என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது பிரேமலதா லேசாக சிரித்தார். அவருடன் இருந்த பார்த்தசாரதி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முழக்கமிட்டவர்களை அதட்டினர்.
மேலும் தனது பேச்சை தொடர்ந்த பிரேமலதா, இன்று தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தலைக்குனிவாக பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மாணவி முதல் முதியவர் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
எங்க பார்த்தாலும் டாஸ்மாக், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இவைதான் பாலியல் வன்கொடுமைக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. எனவே அரசாங்கத்தை எதை முன்னுதாரணமாக காட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதை கேள்வியாகவே மக்கள் சார்பில் நாங்கள் கேட்கிறோம்.
மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிப்போம் என சொன்னார்கள். இன்று வரை நீட்டை ஒழிக்க முடியவில்லை.
நீட்டை ஒழிக்க முடியாது என தெரிந்தும் இதை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பெரிய பிரச்சினையை உண்டு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினையை புதிதாக கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே இது போன்ற பிரச்சினைகள் இருப்பது சகஜம்தான். மதத்தை வைத்து எந்த பாகுபாடும் தமிழகத்தில் பார்க்கக் கூடாது.
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். டெல்டா பகுதிகளில் எத்தனையோ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசை நம்பாமல் மாநில அரசே நம் விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும்.
ஈரோடு கிழக்கில் திமுக வெற்றி பெற்றதற்கு எதற்கு கொண்டாட்டம். போட்டியே இல்லாமல் வென்றதெல்லாம் ஒரு வெற்றியா, எனவே இதை நாங்கள் வெற்றியாக கருதமாட்டோம் என தெரிவித்திருந்தார்.
பிரேமலதா மதுரையில் பேசிய போது, தமிழகத்தில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதுபோல 75 ஆண்டுகால கட்சி திமுக, அதிமுக, கட்சிகள் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட முடியுமா?. இவ்வாறு பிரேமலதா கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications