பறவை காய்ச்சல் பீதி - புளியரை செக்போஸ்ட்டில் தீவிர கண்காணிப்பு
செங்கோட்டை: கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
கேரள மாநிலம் ஆழுப்புழா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏரளமான கோழி மற்றும வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வாத்துகள் திடீரென செத்து விழுந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வாத்துகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதில் அவற்றுக்கு எச்5 ஏவியன் இன்புளுவன்சியா எனப்படும் பறவை காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கேரள கால்நடை துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆழப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் உள்ள வாத்து பண்ணையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த நோய் பாதித்த வாத்துகளை ஊருக்கு வெளியே கொண்டு சென்று தீ வைத்து அழிக்கப்பட்டன. வாத்து மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது போல் கோழிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து கோழி மற்றும் தீவண பொருட்களை தமிழகத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை-புளியரை செக்போஸ்ட்டில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை செய்து டயர்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
குமரியிலும் தீவிர கண்காணிப்பு
இந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் பறவைக்காய்ச்சல் பரவி விடாமல் தடுக்க குமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு மற்றும் ஆரல்வாய்மொழியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கால்நடைத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் 3 கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாத்து, முட்டை கொண்டு வருகின்ற வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி மருந்து ஸ்பிரே மூலம் தெளிக்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழித் தீவனங்கள் மற்றும் கோழிப்பண்ணை உபகரணங்களை குமரி மாவட்டத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் வீடுகளில் கோழி வளர்ப்பவர்கள் கோழிகள் இறந்தாலோ அல்லது கண்டறிய முடியாத அசாதாரண நோய் இருப்பதாக சந்தேகம் கொண்டாலோ உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பறவைக்காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து வரும் ரயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications