வாட்ஸ் அப் குரூப் பெயரை மாற்றியதால் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... ஒருவர் காயம்... 5 பேர் கைது
புனே: வாட்ஸ் அப் குரூப் பெயரை மாற்றியது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கர்வார் கல்லூரியில் பயிலும் பிபிஏ மாணவர்கள் சிலர் சேர்ந்து வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் அமைத்து, அதில் தகவல்கள் பரிமாறி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று அந்த குரூப்பில் இருந்த சங்கீத் (22) என்ற மாணவருக்கு பிறந்தநாள். இதனால், வாட்ஸ் அப் குரூப் பெயரை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிலர் மாற்றியுள்ளனர்.

இதற்கு தினகர் என்ற மாணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாட்ஸ் அப் குரூப்பிலேயே வாக்குவாதமும் நடந்துள்ளது.
இந்நிலையில், அதற்கு மறுதினம் இருவரும் கல்லூரியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலில் முடிந்தது. இதனால், இரண்டு மாணவர்களும் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதில், ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 22 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் விவகாரத்தால் மோதல் ஏற்பட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications