ரூ.50000 லஞ்சம்: பொதுப்பதுப்பணித்துறை பொறியாளரை பொறி வைத்து பிடித்த போலீஸ்
தென்காசி: தென்காசியில் பாலம் கட்ட அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் பொற்செழியன்,வயது 54. இவர் தென்காசி பொதுப்பணித்துறையில் சிற்றாறு வடிநில உதவி கோட்ட அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். சேர்ந்தமரத்தை சேர்ந்த அமல்ராஜ்பாண்டியன் அந்த பகுதியில் முந்திரி கொட்டை உடைக்கும் ஆலை அமைக்க உள்ளார். இந்த ஆலை அமைக்கும் இடத்திற்கு அருகே வாய்க்காலை தாண்டி செல்வதற்காக உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் அங்கு சிறு பாலம் அமைத்து வருகிறது. இந்த பாலம் அமைக்க இளநிலை பொறியாளர் பொற்செழியன் தான் அனுமதி வழங்க வேண்டும்.

பாலம் அமைக்க அனுமதி பெறுவதற்காக அமல்ராஜ்பாண்டியன், பொறியாளர் பொற்செழியனை சந்தித்தார். அப்போது அவர் ரூ.1.50 லட்சம் லஞ்சமாக தர வேண்டும், அப்போதுதான் பாலம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று கூறியுள்ளார். நீண்ட பேரத்துக்கு பிறகு பொற்செழியன் லஞ்ச தொகையை ரூ.1.40 லட்சமாக குறைக்க சம்மதித்தார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அமல்ராஜ் பாண்டியன் இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் மை தடவிய ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து, பொறியாளர் பொற்செழியனிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். நேற்று இரவு பணத்துடன் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்ற அமல்ராஜ்பாண்டியன், இளநிலை பொறியாளர் பொற்செழியனிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சற்குணம் போலீசார் பொறியாளர் பொற்செழியனை கையும், களவுமாக கைது செய்தனர்.
சென்னையில் பொதுப்பணித்துறையில் முதற்கட்டமாக 10 பேரின் ஊழல் பட்டியலையும்ஒப்பந்தக்காரர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. அடுத்த கட்டமாக திருச்சியில் ஊழல்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித் துறை பொறியாளர் பொற்செழியன் லஞ்சம் வாங்கும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications