திமுகவிற்கு தண்ணி காட்டும் விஜயகாந்த்.... மநகூ தலைவர்கள் சொல்றாங்க
சென்னை: "தமிழகத்தில் இன்னும் எங்கள் மக்கள் நலக் கூட்டணியை தவிர மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையான காரணம் அல்ல. மக்கள் நலக்கூட்டணி உருவானதாலேயே மற்ற கட்சிகளால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி, பாஜக என்று திமுகவுக்கு தண்ணி காட்டி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் 3வது கட்ட பிரச்சாரம் சென்னை ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், " இந்த அணி வெளிப்படையானது. இந்த அணியில் யாரையெல்லாம் சேர்ப்போம், யாரையெல்லாம் சேர்க்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளோம்.
கூட்டணிக்காக மற்ற கட்சிகளை போல கதவை திறந்து வைக்கவில்லை. குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக ஆகியவற்றை எங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். மற்ற கட்சிகள் மாட்டுச் சந்தை போல துண்டு போட்டு ரகசியமாக கூட்டணி பேசுகிறார்கள் என்றார்.

ஸ்டாலின் மீது தாக்கு
ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக ஸ்டாலின் செயல்படுகிறார். இதுவரை ஆட்சியில் இல்லாததுபோல இப்போது பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது குடும்பமே ஊழலில் சிக்கி தவிக்கிறது. அதேபோல் அதிமுகவின் அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து வருகிறது. ஊழல் பணத்தில் திமுக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து வருகிறது.

அன்புமணி ஊழல்
நான்தான் முதலமைச்சர் என்று இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், இன்னொருவரும் விளம்பரம் செய்கிறார். அவரும் ராஜாவீட்டு கன்னுக்குட்டிதான். பூரண மதுவிலக்கு அமல்படுத்த முதல் கையெழுத்து போடுவேன் என்கிறார்.

யாருக்கும் தகுதியில்லை
ஆனால் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது போட்ட கையெழுத்துக்காகவே வழக்கு நடக்கிறது. ஊழல் பற்றி பேச எங்கள் அணிக்குதான் தகுதி இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. எங்கள் அணியில் உள்ளவர்களை விரல் நீட்டி யாரும் குற்றம் சொல்ல முடியாது.

வெற்றி உறுதி
வெளிப்படையான, நேர்மையான ஊழல் இல்லாத, மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். திமுக, அதிமுக இல்லாத ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்போ, கோபமோ கிடையாது. நாங்கள் 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுகிறது மக்கள் நலக் கூட்டணி" என்றும் முத்தரசன் பேசினார்.

ஆட்சியை பிடிப்போம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, "மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும். கருணாநிதி ஐந்து முறையும், ஜெயலலிதா மூன்று முறையும் ஆட்சி செய்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த முறை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மகாதேவன், மகாதேவி
கலைஞர் மலைப்பிடுங்கி மகாதேவன், ஜெயலலிதா மலைப்பிடுங்கி மகாதேவி. கடந்த தேர்தல்களில் நாங்கள் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை மறுக்கவில்லை. அவர்களை திருத்த முடிவு செய்தோம். அவர்கள் திருந்தவில்லை. அதனால் தோற்கடிக்க முடிவு செய்துவிட்டோம். இந்த கூட்டணி தேர்தலுக்காக அல்ல. மக்களுக்காகதான் கூட்டணி சேர்ந்தோம் என்று கூறினார்.

சக்தி வாய்ந்த கூட்டணி
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேசும் போது, "தமிழகத்தில் இன்னும் எங்கள் மக்கள் நலக் கூட்டணியை தவிர மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறது என்றார். இதற்கு காரணம் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையான காரணம் அல்ல. மக்கள் நலக்கூட்டணி உருவானதாலேயே மற்ற கட்சிகளால் கூட்டணி அமைக்க முடியவில்லை.

தண்ணி காட்டும் விஜயகாந்த்
மக்கள் நலக்கூட்டணி, பாஜக என்று திமுகவுக்கு விஜயகாந்த் தண்ணி காட்டி வருகிறார். இவர்களுக்குகெல்லாம் அச்சுறுத்தும் கட்சியாக மாறி இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. கட்சி சாராத மக்கள் எங்கள் கூட்டணியை ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

வதந்திகளை நம்பாதீர்கள்
இந்த தேர்தலில் மதுவும், ஊழல்தான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அதனால்நான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. கூட்டணி குறித்து தேர்தல் நெருங்க நெருக்க கட்டுக்கதைகள் சொல்லப்படும். அந்த வதந்திகளை நம்ப வேண்டாம்.

காப்பியடிக்கிறாங்க
ஒபாமாவை காப்பி அடிக்கிறார்கள். எம்பிபிஎஸ் படிக்கும்போது காப்பி அடிக்கலாம். இப்போது தேர்தல் நேரத்தில் ஒபாமாவை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம். 1992ல் நான் எழுதிய 'ஒருநாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும்' என்பதை விளம்பரமாக காப்பி அடித்து இருக்கிறார்கள்" என்று முடித்தார்.

வைகோ ஆவேசம்
கடைசியாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மைக் பிடித்த உடனேயே சூடானார்."தமிழகத்தில்தான் அபூர்வமான காட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

குற்றவாளி கூண்டு
ஒரு குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கருணாநிதி எந்த கூண்டிலும் நிற்க மாட்டார். அதே சமயம் கனிமொழி, தயாளு அம்மாள் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். அண்ணா மறைவுக்கு பிறகு தமிழகம் நாசமாவதற்கு திமுக, அதிமுகவே காரணம். மலைபோல் இருக்கிற ராட்சத கட்சிகளை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் இளைய தலைமுறையை நம்பித்தான் இருக்கிறோம்" என்று முடித்தார்.

ஊழலை ஒழிக்க கூட்டணி
இதனையடுத்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டனர். வைகோ பேசும் போது மைக் மக்கர் செய்யவே, திடீரென்று பவர்கட் ஆனது. இதனால் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். திருவள்ளூரை அடுத்து அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மார்ச் 4 வரை பிரச்சாரம்
கடந்த மாதத்தில் இரண்டு கட்ட பிரசாரத்தை முடித்து விட்ட மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் நேற்று தங்களின் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கினர். வரும் மார்ச் 4ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட பிரச்சாரம் நடக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications