செருப்பு போடாமல் வேலை பார்த்து பதவியை இழந்து.. மறுபடியும் 'சிறப்பு' பெற்ற ஆர்.பி. உதயக்குமார்!
சென்னை: சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்று மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அவருக்கு தமிழக விளையாட்டு இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளராகவும், மதுரை, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர் ஆர்.பி.உதயகுமார்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றதை அடுத்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மிஸ்டர் பணிவு
முதல்வர் ஜெயலலிதாவிடம் பணிவும், பக்தியும் கொண்டவர் ஆர்.பி.உதயகுமார்.

செருப்பு கூட போடுவதி்ல்லை...
2011ம் ஆண்டு மே மாதம் அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல்தான் சென்று வந்தார்.

அம்மாவே தெய்வம்
பலரையும் இது வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி காரணம் கேட்டதற்கு, அம்மாவே என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா இருக்கும் இடம்தான் எனது கோவில் என்றார்

வாழ்நாள் முழுவதும்
முதல்வர் அம்மா, கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன் என்று கூறினார்.

டோஸ் விட்ட ஜெ.
அமைச்சர் செருப்பு அணியாமல் இருந்த தகவல் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றது. அதை முதல்வர் ரசிக்கவில்லை. அவரை அழைத்த முதல்வர், இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது என, அவருக்கு, உத்தரவிட்டார். அதுமுதல் செருப்பணியத் தொடங்கினார்.

எல்லோருக்கும் ஜெ
அமைச்சராக பதவியேற்ற பின்னர் தொகுதியில் நடைபெறும் விழாக்களில் தவறாது பங்கேற்கும் உதயகுமார், பிறந்த குழந்தைகளுக்கு ஜெ என்று தொடங்கும் வகையிலேயே ஜெயக்குமார், ஜெயலட்சுமி, ஜெயராம் என பெயர் வைத்து முதல்வர் மீது இவர் கொண்ட பற்றை வெளிப்படுத்தினார்.

பறிபோன பதவி
ஆனாலும் அமைச்சராக பதவியேற்று 5 மாதத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் கவலைப்படாமல் கட்சிப் பணியாற்றி வந்தார் உதயகுமார்.

மீண்டும் பதவி
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆர்.பி. உதயகுமார். மீண்டும் பணிவோடு பதவியை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
இந்த முறை கண்டிப்பாக செருப்பை கழற்ற மாட்டார் என்று நம்புவோமாக.... !












Click it and Unblock the Notifications