ஆர்.கே.நகரில் ஜெவுக்கு எதிராக நிற்கும் திமுக சிம்லா.. சற்குணபாண்டியனின் மருமகள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சிம்லா முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளி வந்ததில் இருந்தே, அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நேற்று மாலை திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது.
சிம்லா முத்துசோழன் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள். திமுகவின் வழக்கறிஞர் அணியில் இருக்கிறார். அத்தோடு மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும்,இவர் திமுகவில் போட்டியிட அளித்த விருப்ப மனுவில், ராயபுரம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு விருப்பம் தெரிவித்து மனு அளித்து இருந்தார்.

ஆர்.கே.நகரில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவை போட்டியிட வைத்து அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என, தி.மு.க கருதியது. கட்சி மேலிடம் சம்மதித்தால் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என குஷ்புவும் அறிவித்தார்.

ஆனால், நேற்று வெளியிடப்பட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம், தி.மு.க சார்பில் ஆண் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு வந்தனர்.முதல் முறையாக ஆர்.கே.நகரில், தி.மு.க சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞரான சிம்லா பல ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக உள்ளார். தி.மு.கவில் மகளிர் பிரசார குழு செயலராகவும் உள்ளார்.

மேலும் "மாஸ்" என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச மருத்துவ உதவிகளையும், சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அவரது கணவர் முத்துசோழன், வழக்கறிஞராகவும், வடசென்னை கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் முன்னாள் அமைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications