தமிழகத்திற்கு வருகிறார் ராகுல் காந்தி.. "ரோட் ஷோ" நடத்த காங்கிரஸ் திட்டம்...?
சென்னை: பாஜகவின் தூய்மை இந்தியா திட்டம் போல, தமிழக காங்கிரஸில் தற்போது கோஷ்டி இல்லாத காங்கிரஸ் என்ற திட்டம் அமல்படுத்தப்படுவது போலத் தெரிகிறது. இருக்கிற கோஷ்டிகளையெல்லாம் கழித்து விட்டு காங்கிரஸைப் பலப்படுத்த ராகுல் காந்தி புதுத் திட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவது போலத் தெரிகிறது.
மேலும் ராகுல் காந்தியே கூட தமிழகத்திற்கு விரைவில் வரவுள்ளாராம். மாநிலம் முழுவதும் ஒரு ரோட் ஷோ நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழக காங்கிரஸில் தற்போது வலுவான கோஷ்டிகள் என்று யாருமே இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. முன்பு ஜி.கே.வாசன் கோஷ்டியும், ப.சிதம்பரம் கோஷ்டியும் வலுவாக மோதிக் கொண்டிருப்பார்கள். அதிலும் ஜி.கே.வாசன் கோஷ்டிதான் பலமானதாக இருந்து வந்தது. தற்போது வாசன் கோஷ்டி போய் விட்டது. புதுக் கட்சியாகி விட்டார்கள்.
அதேசமயம், கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் கோஷ்டி தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த முனைந்து வருகிறது. ஆனால் கத்திரிக்கோலும் கையுமாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு அவ்வப்போது சரியான ஆப்பு வைத்து வருகிறார். இதனால் வாசன் விட்ட இடத்தைப் பிடிக்க முடியாமல் ப.சிதம்பரம் கோஷ்டி கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தடாலடியாக நடிகை குஷ்புவை காங்கிரஸுக்குள் கொண்டு வந்தார்கள். அவருக்கு தற்போது நல்ல முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரை வைத்து தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்க ஏகப்பட்ட திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகிறார்கள்.
கட்சிக்குள் கோஷ்டி சத்தத்தை சற்று குறைத்து விட்ட நிலையில் அடுத்து ராகுல் காந்தியை வைத்து தமிழக மக்களுக்கு ஒரு ஷோ காட்ட, அதாவது ரோட்ஷோ நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறதாம். விரைவில் இது நடக்குமாம். இதற்கான முயற்சிகளை இளங்கோவன் எடுத்து வருகிறாராம். அதை தனது சொந்த மாவட்டமான ஈரோட்டிலிருந்து தொடங்கவும் முயற்சித்து வருகிறாராம் இளங்கோவன்.
எனவே கூடிய விரைவில் ராகுல் காந்தியின் "எம்பவர்மென்ட்" பேச்சுக்களை தமிழக மக்களும் காது குளிரக் கேட்கலாம்!












Click it and Unblock the Notifications