விட்டாச்சு லீவு... கோடையைச் சமாளிக்க ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள்... பூ மழை தூவி வரவேற்பு!
ஊட்டி: கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் மக்கள் ஊட்டியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அங்கு மழை பெய்து வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. எனவே, கோடையின் வெப்பத்தை சமாளிக்க மக்கள் குளுகுளுப் பிரதேசங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையும் தொடங்கி விட்டதால் சுற்றுலாத் தளங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஊட்டி...
சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து தப்பிக்க கோடை விடுமுறையைக் கொண்டாட விரும்புவர்களில் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள் தான். அதன்படி இந்தாண்டும் ஊட்டியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றன.

மழை...
நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

வெள்ளப்பெருக்கு...
பலத்த மழை காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையம் சாலை, சேரிங்கிராஸ், எட்டின்ஸ் ரோடு, படகு இல்ல சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மக்கள் அவதி...
ஊட்டி மார்க்கெட்டுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடை உரிமையாளர்கள் கடையில் தேங்கி நின்ற தண்ணீரை பாத்திரம் கொண்டு வாரி இறைத்து வெளியேற்றினர்.

போக்குவரத்து நெரிசல்...
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மழை காரணமாக அறைகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

படகு சவாரி...
சிலர் மழையை ரசித்தபடியே குடை பிடித்தபடி படகு சவாரி உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். ஆனால், மழை வலுத்ததால் சிறிது நேரம் படகு சவாரியை அதிகாரிகள் தடை செய்தனர்.












Click it and Unblock the Notifications