நெல்லை, குமரியில் பருவமழை தீவிரம் - 5 பேர் பலி; அருவிகளில் குளிக்கத் தடை
திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது நேற்று இரவு முதலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இந்த மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். திற்பரப்பு, குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக பெய்த மழையில் 25 வீடுகள் இடிந்து உள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதே போல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் சேத மதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட 24 மணி நேர மீட்பு குழு தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது என்றும் திற்பரப்பு அருவியில் தகவல் அளித்துள்ளனர்.

மீனவர் பலி
குமரி மாவட்டம் பொழிக்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த தஸ்நேவிஸ் (57) என்பவர் இன்று காலை தனக்கு சொந்தமான கட்டுமரத்தில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம், மில்டன் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கடல் அலையின் வேகம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்தது. இதனால் கட்டுமரத்தில் இருந்து மீனவர்கள் மூவரும் தவறி விழுந்தனர். இதில் ரத்தினம், மில்டன் ஆகியோர் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் தஸ்நேவிசை காணவில்லை. உடனடியாக இது பற்றி மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் மரைன் போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். மீனவர்கள் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர், தஸ்நேவிஸ் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன தஸ்நேவிசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.நாகர்கோவில் கோட்டாறு இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்.

மின்சாரம் தாக்கி பலி
லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அஞ்சு. இவர்களது மகன் ஆகாஷ்,2, அஞ்சுவின் தாயார் வீடு நாகர்கோவில் பார்வதிபுரம் அண்ணா நகரில் உள்ளது. கடந்த வாரம் அஞ்சு தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். நேற்று இரவு நாகர்கோவிலில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அஞ்சுவின் தாயார் வீட்டில் டிவிக்கான கேபிள் ஒயரை கழற்றி வைத்திருந்தனர். ஓடு வீடு என்பதால் வீட்டில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை அனைவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆகாஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் கழற்றி விடப்பட்டிருந்த கேபிள் ஒயரை வாயில் வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து, ஆகாஷ் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆகாஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். அஞ்சு மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து நேசமணிநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் பலி
நாகர்கோவில் கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்தவர் வேணுகுமார்,32. இவர் வாத்தியார்விளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கோணத்தில் உள்ள ரோலிங் ஷட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள இயந்திரம் ஒன்றின் மேற்பகுதியில் உள்ள டியூப்லைட் மாற்ற ஸ்டூல் மீது ஏறியுள்ளார். அப்போது திடீரென ஷாக் அடித்ததில் வேணுகுமார் பின்புறமாக விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வேணுகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். வேணுகுமாருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலை இழுத்துச் சென்றவர் மாயம்
புதுக்கடை அருகே உள்ள இணையம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர் பீட்டர்,67. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை வந்து பீட்டரை இழுத்து சென்றது. இதை பார்த்த மற்ற மீனவர்கள் கடலுக்குள் இறங்கி அவரை தேடினர். ஆனால் பீட்டரை கண்டுபிடிக்க முடியவில்லை.
குளச்சலில் இருந்து மரைன் போலீசாரும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் பீட்டரை கண்டுபிடிக்க முடிய வில்லை. அவரது கதி என்ன? என்பது இதுவரை தெரிய வில்லை.

இடிந்து விழுந்து பலி
திருவட்டாரை அடுத்த முதலார் தேவர் திட்டை பகுதியில் முந்திரி ஆலை உள்ளது. இங்கு சுமார் 50 அடி உயர புகை குழல் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த புகை குழல் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென சரிந்து அருகில் உள்ள சபரிபாய்,65 என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சபரிபாய் இடிபாடுகளில் சிக்கி பலியானார். வீடு தரைமட்டமானது. சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு திரண்டனர். இது குறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டி சபரிபாய் உடலை மீட்டனர். இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலத்த மழை காரணமாக கட்டுமானம் சரி இல்லாததால் புகை குழல் சரிந்து விழுந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

குற்றாலத்தில் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது.

24 மணி நேரத்திற்கு மழை
இலங்கை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்று மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் கன்னியாகுமரி இடையேயான பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications