சிறையில் ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடும் முருகன்... ஜீவசமாதி பயணத்தை நோக்கி செல்கிறார்?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் நாள்தோறும் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதே போன்று நளினியும் தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோலில் விட வேண்டும் என்றும், சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன். இதற்கு மேலும் சிறைவாழ்க்கையை தொடரவிரும்பவில்லை. அதனால் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புகிறேன்.எனவே வருகிற 18ஆம் தேதி முதல் உணவு உண்ணாமல் பட்டினி கிடந்து சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தோற்றத்திலும் சாமியார் போலவே காவி உடை, தலையில் நீண்ட முடி என்று காட்சியளிக்கிறார் முருகன். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் 18ஆம் தேதி ஜீவசமாதி அடைவதற்காக தற்போது சாப்பிட்டுவரும் ஒருவேளை உணவையும் தவிர்த்து பழங்களை மட்டுமே சாப்பிட இருப்பதாகவும் முருகன் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications