காவிரியில் கழிவுநீர்: தமிழகம் கேள்வி கேட்கக் கூடாதா?.. சித்தராமையாவுக்கு ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியில் கழிவுநீரை கலக்கவிடுவது குறித்து தமிழகத்துக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி ஆற்றில் கர்நாடகம் கழிவு நீரை கலக்கவிடுவது குறித்து வினா எழுப்ப தமிழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். காவிரியில் கழிவு நீர் கலப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆணையிடப்பட்டிருப்பது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார். சித்தராமய்யாவின் திமிர் பேச்சு கண்டிக் கத்தக்கது.

ஒருமைப்பாட்டுக்கு எதிரானது..

ஒருமைப்பாட்டுக்கு எதிரானது..

கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவின் இந்த பேச்சு திமிரானது; பொறுப்பற்றது; இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது; உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டது ஆகும். காவிரி மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறு ஆகும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் பாயும் காவிரி தான் தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 25 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் திகழ்கிறது.

தூய காவிரி நீர் உரிமை உண்டு

தூய காவிரி நீர் உரிமை உண்டு

அவ்வகையில் தூய்மையான காவிரி நீரைப் பெறும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. மக்கள் நல அரசு என்ற முறையில் அவர்களுக்கு தூய்மையான காவிரி நீரை வழங்க வேண்டிய அரசியல் சாசனக் கடமை கர்நாடக அரசுக்கு உண்டு. ஆனால், காவிரியில் கழிவு நீரை கலக்க விட்டதன் மூலம் அரசியல் சட்டப்படியான கடமையிலிருந்து கர்நாடகம் தவறிவிட்டது. அதை நியாயப்படுத்தியதன் மூலம் அரசியல் சட்டத்தை சித்தராமய்யா அவமதித்துவிட்டார்.

தனிநாடுகள் அல்ல...

தனிநாடுகள் அல்ல...

காவிரியில் கர்நாடக மாநில கழிவுகள் கலப்பது குறித்து வினா எழுப்ப தமிழகத்திற்கு அரசியலமைப்பு சட்டப்படி உரிமை உள்ளது. அதனால்தான் இது குறித்த தமிழக அரசின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடகமும், தமிழகமும் தனித்தனி நாடுகள் அல்ல. ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தின் இருவேறு மாநிலங்கள் தான்.

ஒருமைப்பாட்டுக்கு எதிரானது...

ஒருமைப்பாட்டுக்கு எதிரானது...

காவிரியில் கர்நாடகத்துக்கு உள்ள அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கும் உண்டு. அவ்வாறு இருக்கும் போது காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி வினா எழுப்ப தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று பேசுவதும், யார் தடுத்தாலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று வீர முழக்கமிடுவதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவையாகும்.

148.2 கோடி லிட்டர் கழிவு நீர்

148.2 கோடி லிட்டர் கழிவு நீர்

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் பாயும் காவிரி ஆற்றிலும், பெண்ணையாற்றிலும் ஒவ்வொரு நாளும் 148.2 கோடி லிட்டர் கழிவு நீர் கலக்கிறது. இந்த கழிவுகள் கலந்த காவிரி நீரை கர்நாடகத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், உயிர்வேதி ஆக்சிஜன் தேவை லிட்டருக்கு 19.7 மில்லிகிராம் முதல் 32 மில்லிகிராம் வரை இருப்பதாக தெரிய்வந்துள்ளது. உயிர்வேதி ஆக்சிஜன் தேவை என்பது தண்ணீரில் கலந்திருக்கும் கரிம வேதிப்பொருட்களின் அளவு ஆகும். பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீரை கொண்டுவர வேண்டுமானால் அதே அளவுக்கு ஆக்சிஜன் சேர்க்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. தூய்மையான தண்ணீரில் இதன் அளவு லிட்டருக்கு ஒரு மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். சென்னையில் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரில் கூட இது 20 மில்லிகிராம் என்ற அளவில் தான் உள்ளது. ஆனால், காவிரி நீரில் அதைவிட அதிகமாக 32 மில்லிகிராம் வரை இருக்கிறது. அதேபோல், ஒரு லிட்டர் காவிரி நீரில் கோலிஃபார்ம் எனப்படும் பாக்டீரியா 78 லட்சம் வரை இருப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

மோசமான கழிவுநீர்

மோசமான கழிவுநீர்

காவிரி நீரில் கலந்திருக்கும் கழிவுகள் மிக மோசமானவை ஆகும். இதனால் மனிதர்களுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். மேட்டூர் அணையில் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதற்கு இதுதான் காரணம் ஆகும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் கர்நாடகத்தின் மனித உரிமைக்கு எதிரான செயலை எதிர்த்து கேள்வி எழுப்பக்கூடாது என்று சித்தராமய்யா கூறுவது, அவர் மனித உணர்வுகளை மதிக்கும் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.

காவிரி தூய்மை திட்டம்

காவிரி தூய்மை திட்டம்

சித்தராமய்யாவின் இந்த போக்கை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, கழிவுகள் கலந்ததால் பாதிக்கப்பட்ட காவிரி ஆற்றை சீரமைத்து, தூய்மைப் படுத்துவதற்காக, கங்கை ஆற்றுக்கு அமைக்கப்பட்டிருப்பதை போல காவிரி தூய்மைத் திட்டத் தையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+