3 பல்கலை. துணைவேந்தர் நியமன வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே காசுவாங்கி தகுதியற்றோர் நியமனமா?: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் முன்னதாகவே தகுதியற்றோரை துணைவேந்தர்களாக முறைகேடாக தமிழக அரசு நியமிக்க முயற்சிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதையும், அதிக விலை தருபவர்களை அப்பதவிகளில் அமர்த்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த 16.01.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தேன். இதை உறுதி செய்யும் வகையில் 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடை பெறுவதாக வெளியாகும் தகவல் கவலையளிக்கிறது.

விதிகளை பின்பற்ற மறுப்பு

விதிகளை பின்பற்ற மறுப்பு

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உள்ளது. அந்த அமைப்பால் அவ்வப்போது வகுக்கப்படும் விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவது கட்டாயம் ஆகும். ஆனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் இந்த விதிகளை கடைபிடிக்கும் தமிழக அரசு, துணைவேந்தர் நியமனத்தில் கடைபிடிப்பதில்லை.

தொடக்க நிலை பணிகளுக்கே விதிகள் கடைபிடிக்கப்படும் போது, உயர்ந்த நிலை பணிகளுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுவது தான் முறையாகும். அவ்வாறு விதி கடைபிடிக்கப்படாவிட்டால் ஊழல்களும், முறைகேடுகளும் தலைதூக்கும் என்பது தான் இயற்கை. இதை நன்றாக உணர்ந்துள்ள தமிழக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் செய்வதற்கு வசதியாகவே பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்ற மறுக்கிறது என்பது தான் உண்மை.

அனந்தகிருஷ்ணன் வழக்கு..

அனந்தகிருஷ்ணன் வழக்கு..

இதை எதிர்த்து கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

தீர்ப்புக்கு முன்னரே நியமனம்

தீர்ப்புக்கு முன்னரே நியமனம்

இவ்வழக்கின் தீர்ப்பு தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமையலாம் என்பதால், அத்தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகம், சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக இந்த 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுக்களுடன் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமது விருப்பப்படியான பெயர்களை கொடுத்து அந்த பெயர்களை ஆளுனருக்கு பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படியே, 3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரைப்பட்டியலை ஆளுனரிடம் தேர்வுக்குழுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன.

தகுதியற்றவர்கள்

தகுதியற்றவர்கள்

அப்பட்டியலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் துணைவேந்தர்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கான பணி நியமன ஆணை எந்த நேரமும் அவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மூவருமே பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளை பெறாதவர்கள். பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி பேராசிரியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்க முடியும். ஆனால், பேராசிரியராக குறைந்த ஆண்டுகளே அனுபவம் பெற்றவர்களையும், இணை பேராசிரியர்களாக இருப்பவர்களையும் துணைவேந்தர்களாக நியமிப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல்கலைக்கழக உயர்கல்வி மிக மோசமாக சீரழியும்.

சீரழியும் பல்கலைக் கழகங்கள்

சீரழியும் பல்கலைக் கழகங்கள்

தமிழ்நாடு தகவல் ஆணையம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றில் முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினரை நியமித்து அவற்றின் புனிதத் தன்மையையும், நேர்மையையும் குழிதோண்டி புதைத்த அ.தி.மு.க. அரசு, தகுதியில்லாதவர்களையும், பணம் வைத்திருப்பவர்களையும் துணைவேந்தர்களாக நியமித்து பல்கலைக்கழகங்களையும் சீரழிக்க முயல்கிறது.

கைவிடுக

கைவிடுக

இந்த முயற்சி தடுக்கப்படாவிட்டால் தமிழக பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி அமைப்பாக இல்லாமல் கல்வி வணிக நிறுவனங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயித்த கல்வித்தகுதியும், திறமையும், தலைமைப் பண்பும் கொண்ட பேராசிரியர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர். அவர்களை புறந்தள்ளிவிட்டு தகுதியில்லாதவர்களை துணைவேந்தர் பதவியில் அமர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கல்வித் தகுதி குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை துணைவேந்தர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி வெளிப்படையான முறையில் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+