இணையத்தில் மீன் விற்பனை: ராமேஸ்வரம் மீனவ இளைஞர் தொழில்முனைவரான வெற்றிக் கதை!
மீனவ குடும்பத்தில் பிறந்த ஆராக்கிய மன்றோ கணினி அறிவியல் படித்து சுயதொழில் தொடங்கி அந்த சமுதாய இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்.
சென்னை: தூக்கி வீசும் கடல் அலையைக் கண்டாலே மிரளும் மக்களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டுச் சென்று கடல் உணவுகளை அள்ளி வருவதிலேயே காலத்தை கழிக்கின்றனர் மீனவர்கள். கடலில் வாழ்க்கையைத் தொடங்கி அங்கேயே சிலரது வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் மீனவர் என்ற அடையாளத்தைத் தாண்டி தொழில்முனைவர் என்னும் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆரோக்கிய மேன்றோ. தங்கச்சிமடத்தில் பிறந்து இன்று இணையவழியில் மீன்களை விற்பனை செய்யும் தொழில்முனைவராக ஆரோக்கிய மேன்றோ வளர்ந்துள்ளது குறித்த அவரிடம் நேர்காணல் கண்டது ஒன் இந்தியா, அதன் விவரங்கள்:
எனக்கு 10 வயது இருக்கும் போதே அப்பா விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அண்ணன்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்று குடும்பத்தை வழி நடத்தினர். பள்ளிப்படிப்பை தங்கச்சி மடத்தில் இருந்த சமூகப் பள்ளியிலும், தொடர்ந்து அருகில் இருந்த ஊரில் மேல்நிலைக் கல்வியும் பயின்றுள்ளார்.

படிப்பில் நம்பர் ஒன்
மூத்த சகோதரர்களின் அரவணைப்பிலும் தாய் விக்டோரியா அன்பிலும் வளர்ந்த ஆரோக்கிய மேன்றோ கல்வியில் சிறந்து விளங்கியதால் 2007ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ளார். தங்கச்சிமடம்என்னும் சிறு கிராமத்தில் இருந்து வந்த மேன்றோவிற்கு சென்னை நகரத்து வாழ்க்கையும், ஆங்கிலம் கரைபுரண்டோடும் மாணவர்களின் வார்த்தை ஜாலங்களும் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

லண்டனில் உயர்கல்வி
ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தானே முயற்சித்து ஆங்கிலத்தை கற்று அது வெறும் மொழியே தவிர பயப்பட எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்ததும், மேற்படிப்பிற்காக தானே முயற்சித்து லண்டனில் எம்.எஸ் படித்துள்ளார். "முதுநிலைப் படிப்பிற்காக நானே கல்விக்கடன் வாங்கி, கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து எம்.எஸ். கம்ப்யூட்டர் நெட்வோர்க் செக்யூரிட்டி படித்தேன். அங்கு பகுதி நேரமாகப் பணியாற்றிக்கொண்டே படிப்பை தொடர்ந்தேன்," என்று 24 மணி நேரமும் கடல்அலை போல தனது போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்துள்ளார் இந்த அலைமகன்.

படிப்பு சார்ந்த சுயதொழில்
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது முதலில் படிப்பு சார்ந்த தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளார் மேன்றோ. படித்து முடித்து தொழில்முனைவராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது, அதனால் இந்தியா வந்ததும் என்னுடைய படிப்பு சார்ந்தே சிசிடிவி கேமரா, ஃபையர் அலாரம் பொருத்துவது அவற்றை பராமரிப்பது உள்ளிட்டவற்றை செய்து வந்தேன். சிறிய முதலீட்டில் தொடங்கிய அந்தத் தொழில் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும், எனக்கான கடன்களை அடைக்க உதவியது என்கிறார் மேன்றோ.

சமூகம் சார்ந்த தொழில்
எனினும் வெற்றி எனும் இலக்கு வெகுதூரம் இருப்பதை உணர்ந்த மேன்றோ, ஏன் தனது சமூகத்தொழிலான மீன் விற்பனையை நவீனப்படுத்தக் கூடாது என்று நினைத்துள்ளார். இதனால் இணையத்தில் மீன் உணவுகளை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலை 2016ம் ஆண்டு தொடங்கியுள்ளார்.

முன் அனுபவம்
"கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே சென்னையில் வார விடுமுறைகளில் மீன், இறால், நண்டு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து வீடுகளுக்குக் கொடுத்து வந்தேன்.இதன் மூலம் வாரம் ரூ.1000வரை பணம் கிடைக்கும் அதனை என்னுடைய கல்வி செலவுகளுக்கு பயன்படுத்துவேன். அதையே தற்போது இணையவழியில் தொழிலாக செய்து வருகிறேன்" என்கிறார் மேன்றோ.

முயற்சி
கடல் உணவுகளை வாங்கி சுத்தம் செய்து, சரியான முறையில் பேக் செய்து வீட்டிற்கே கொண்டு வந்து தருவது தான் மேன்றோ செய்து வருகிறார். முதலில் 2 நபர்களுடன் தொடங்கி இந்தத் தொழிலில் தற்போது 4 பேரை தனக்கு கீழ் வைத்துக் கொண்டு செய்கிறார் மேன்றோ.
இணையவழி விற்பனை இது வரை விற்பனை நிலையம் என்ற ஒன்றே இல்லாமல், இணையத்தில் ஆர்டர்களைப் பிடித்து அவர்களுக்கு கடல் உணவுகளை சுத்தம் செய்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார் மேன்றோ. தற்போது அண்ணாநகர் அருகில் உள்ள 20 கிமீ தூரம் வரை வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள மேன்றோ, குறிப்பிட்ட நாட்களில் முன்பதிவு முறையில் சென்னையின் மற்ற பகுதி வாடிக்கையாளர்களுக்கும் தரமான கடல் உணவுகளை டெலிவரி செய்து வருகிறார்.

கனவு
அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மட்டுமல்லாது, இதர மெட்ரோ நகரங்களிலும் தனது தொழில் பயணத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தோடு தொடர்ந்து வெற்றியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் மேன்றோ. தனது வெற்றிக்கான இலக்கை அடைய உறவினர்களின் கேலிக் கிண்டல் பேச்சுகளை துச்சமென நினைத்த மேன்றோ இன்று அவர் சார்ந்த சமூகத்தின் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.












Click it and Unblock the Notifications