தொடரும் விசித்திர தீர்ப்புகள்: பலாத்காரம் செய்த பெண்ணுடன் திருமணமானதால் குற்றவாளி விடுதலை- ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து விசித்திரமான தீர்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது பலாத்காரம் செய்த பெண்ணுடன் 'சந்தோஷமாக' குடும்பம் நடத்தி வருவதைக் கருத்தில் கொண்டு குற்றவாளியை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது.

விருதாச்சலத்தை சேர்ந்த மோகன் என்பவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். இவர் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், பலாத்கார சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளி மோகனும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று சேர்ந்து வாழ்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Rape accused acquitted by Madras HC

இந்த உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பலாத்கார வழக்கை விசாரித்து நீதிபதி தேவதாஸ் மீண்டும் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது பெற்றோர் முருகையன்-சின்னப்பொண்ணு. மனோகரனும், அதே ஊரைச்சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்தனர். அப்போது அந்த பெண்ணுடன் மனோகரன் தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, மனோகரனின் பெற்றோரும், காக்களூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுப்பிரமணியும் அந்த பெண்ணை சாதியை குறிப்பிட்டு திட்டியுள்ளனர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசில் அந்த இளம்பெண் புகார் செய்தார். இந்த வழக்கில் மனோகரன் மீது பலாத்காரம் செய்தல், திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழும், அவரது பெற்றோர் மற்றும் சுப்பிரமணி மீது கொலை மிரட்டல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் மனோகரனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.33 ஆயிரம் அபராதமும், முருகையன், சின்னபொண்ணு, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மனோகரன் தன்னை 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்து சந்தோசமாக கணவனின் வீட்டில் வாழ்வதாகவும், தன் மாமனார், மாமியாரும் தன்னை நல்லபடியாக பார்த்து கொள்வதாகவும், பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணி தன்னுடைய நல விரும்பி, குடும்ப நண்பர் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தற்போது தன் கணவர் உள்பட 4 பேருக்கும், இந்த நீதிமன்றம் தண்டனை வழங்கினால், தன்னுடைய சந்தோசமான இல்லற வாழ்வை இழக்க வேண்டியது வரும் என்றும் கூறியிருந்தார்.

குற்றவாளி விடுதலை- நீதிபதி தீர்ப்பு

இதையடுத்து நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்துள்ள உத்தரவு:

பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்துள்ள திருமண புகைப்படம், குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை பார்த்தேன். இப்போது இந்த நீதிமன்றம் என்ன செய்ய முடியும்?

அந்த பெண்ணின் கணவனை சிறைக்கு அனுப்புவதா? அல்லது அந்த பெண்ணுடன் சந்தோசமாக வாழ அவனை அனுமதிப்பதா?

மனோகரன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை சட்டம், தண்டனை பற்றியும், பாதிக்கப்பட்டோர் சட்டம் பாதிப்புகளை பற்றியும் கூறுகிறது. இவை இரண்டும், சமூக இயல் மற்றும் மனித உளவியலை பற்றியும் ஆய்வு செய்கிறது.

தண்டனை வழங்குவது என்பது சமூக இயலுடன் தொடர்புடையது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், சமுதாய நடைமுறையையும் கருத்தில் கொண்டு தண்டனை வழங்கும் விதமாக குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழிவகை செய்கிறது. இந்த குற்றத்துக்கு இந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி விட முடியாது. சமுதாய நடைமுறைபடி, சில வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டியது வரும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்' என்ற ரீதியில் தண்டனை வழங்கப்பட்டது. அதுபோல, உணர்வுகள் எதுவும் இல்லாத எந்திரங்களை போல நீதிபதிகள் தண்டனை வழங்கி விட முடியாது. தண்டனை வழங்குவதற்கு முன்பு, குற்றவாளி தன் தவறை உணர்ந்து வேதனைப்படுகிறானா? அவனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அவனது வருமானத்தில்தான் குடும்ப உறுப்பினர்கள் வாழ்கின்றனரா? என்பதையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

தற்போது மனுதாரர் மனோகரனும், பாதிக்கப்பட்ட பெண்ணும் கணவன், மனைவியாக சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலையில், மனுதாரரை சிறைக்கு அனுப்பி, இந்த பெண்ணுக்கு மனவேதனையை ஏற்படுத்த முடியாது. அப்படி கடுமையான தண்டனை வழங்குவதுதான் நீதி பரிபாலனத்தின் முடிவாகவோ, தரமான தீர்ப்பாகவோ கருதமுடியாது. நீதி பரிபாலனம் என்பது எப்போதும் கருணை கலந்ததாக இருக்க வேண்டும். நீதியின் மாட்சி என்பது பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தான் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் கொண்டபோது, அவர் சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதி உச்சநீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. மனித உணர்வினை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் என்பது கற்களாலும், மணலாலும் கட்டப்பட்டுள்ளது என்றாலும், அந்த நீதிமன்றத்தின் நீதி பரிபாலனம் மனிதாபிமானம் கொண்ட மனிதர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு இந்த வழக்கை பரிசீலனை செய்யும்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தையின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இதனடிப்படையில் மனுதாரர் மனோகரன் இதுவரை சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கருதி அவரை விடுதலை செய்கிறேன். அதேபோல அவரது பெற்றோர் மற்றும் சுப்பிரமணி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களையும் வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தேவதாஸ் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+