நள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிக்கிடந்த பிரிட்ஜ்.. பரபத்த ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியுள்ளது. நேற்று நள்ளிரவில் திடீரென பிரிட்ஜ் வெடித்து சிதறி தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் மொட்டை மாடியில் படுத்து தூங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம்.. ராணிப்பேட்டை அருகே உள்ள மெல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு மனைவி மற்றும் மகன், மகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை, குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் படுப்பதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல மாடியில் சென்ற படுத்து தூங்கிவிட்டனர். அப்போது வீட்டில் இருந்து நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதனால், அதிர்ந்து போய் விழித்த மணிகண்டன் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பிரிட்ஜ் வெடித்து சிதறியதோடு வீட்டிற்குள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இது தொடர்பாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். எனினும் தீ அணைப்பு படையினர் வருவதற்குள் வீட்டில் இருந்த பீரோக்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.
வீட்டிற்குள் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் காரணமாக வீட்டிற்குள் தூங்காமல் வெளியில் சென்று தூங்கியதால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயர் மின் அழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்து சிதறியதா? அல்லது அதீத வெப்பத்திற்கும் இந்த பிரிட்ஜ் வெடித்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. வெயில் காலங்களில் மின்சாதன பொருட்களை மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications