தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், ரயில்கள் இன்றி தவிக்கும் பயணிகள்: 400 பேருந்துகள் இயக்க முடிவு
சென்னை: சென்னையில் பெய்த கனமழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று புதன்கிழமை தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழையால், தனித் தீவு போல மாறியுள்ள தலைநகரம். தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர்.
|
தாம்பரத்தில் தவிப்பு
சென்னை மாநகரத்திலிருந்து வெளியூர் செல்லும் அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், தீவாக தத்தளித்து வருகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் தாம்பரத்தில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் தங்க இடம், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

சாலை மறியல்
தாம்பரம்- விழுப்புரம் இடையேயான சாலை மழை நீரால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வழியே இன்னும் போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாம்பரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிக்கிய வெளியூர்வாசிகள்
இதே போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களும் வெள்ளத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டனர். பஸ், கார் போன்ற வாகனங்களில் வந்தவர்கள் வீடு செல்ல முடியாமல் இரவு முழுவதும் வாகனத்திலேயே முடங்கி கிடந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்ற பஸ்கள் பெருங்களத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சென்னை நகரில் பல இடங்களில் மாநகர பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கி கொண்டன. சாலையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திண்டாட்டம்
இதனால் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட மிக குறைந்த அளவில் இயக்கப்பட்டன. முக்கியமான சாலைகளில் பஸ் போக்குவரத்து இல்லாததால் பொது மக்கள் அவதிப்பட்டனர். வழக்கத்தை விட பேருந்து போக்குவரத்து குறைந்ததால் பொது மக்கள் திண்டாடினார்கள்.

ரயில்சேவை நிறுத்தம்
மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதால் ரயிலில் செல்ல முடியவில்லை. பூந்தமல்லி சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, அடையாறு வடபழனி, சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து கணிசமாக குறைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.

புறநகர் பேருந்துகள் நிறுத்தம்
மேலும் புறநகர் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தாம்பரம், முடிச்சூர், சேலையூர், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

400 பேருந்துகள் இயக்கம்
சென்னையில் பெய்த கனமழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று புதன்கிழமை தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications