சேலத்தில் டாஸ்மாக் கடைகளை கூண்டோடு மூடி ஊழியர்கள் போராட்டம்.. பாதுகாப்பு கோருகிறார்கள்!
சேலம்: சேலத்தில் மூடியிருந்த டாஸ்மாக் கடைமீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் உள்ளே தூங்கி கொண்டிருந்த விற்பனையாளர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 264 டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் திறக்காமல் மூடி விட்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு தராவிட்டால் கடைகளைத் திறக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு டாஸ்மாக் ஊழியர் செல்வம் தனது கடையில் இரவில் தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் கடை ஷட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பெட்ரோல் கடையின் உள்ளே வழிந்தோடி தீ பிடித்ததில் மது பாட்டில்கள் வெடித்து சிதறி எரிய தொடங்கின.

தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும், பரவாமல் தடுத்தனர். எனினும், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்தன. மேலும், கடையின் உள்ளே மயங்கிய நிலையில் இருந்த செல்வத்தை மீட்ட தீயணைப்புத்துறையினர், உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
விற்பனையாளர் செல்வம் உயிரிழந்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 264 டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த செல்வம் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே செல்வத்தின் உடலை பெறுவோம் எனக் கோரி சேலம் அரசு மருத்துவமனையை டாஸ்மாக் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் இரவில் ஒரு ஊழியர் தங்க வேண்டும் என்ற விதியினை அரசு அமல்படுத்தியுள்ளது. இதுவும் புதிய பிரச்சினையாக வெடித்துள்ளது. தங்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வரையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையையும் திறக்க மாட்டோம் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 1000 ஊழியர்கள் சேலம் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications