சமத்துவ மக்கள் கட்சியில் கலகம்.. மகளிர் அணிச் செயலாளர் ஜெமிலா டிஸ்மிஸ்!
சென்னை: சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் மா.ரா. ஜெமிலா கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது அவரை கட்சியை விட்டு நீக்குவதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஜெமிலாவுடன் மேலும் சிலரையும் சரத்குமார் கட்சியை விட்டு நீக்கியுள்ளார். சரத்குமாரை விட பேஸ்புக்கில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தவர் ஜெமிலா. தற்போது அந்த பேஸ்புக் புழக்கமே அவரை கட்சியை விட்டு விலகும்- நீக்கும் அளவுக்குப் போயுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியில் பெயரளவில் மட்டுமே சமத்துவம் இருப்பதாக ஜெமிலா குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், பேஸ்புக்கில் கட்சி குறித்து அவதூறு பரப்பியதாக சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலில் விலகல்
முன்னதாக ஜெமில் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் தான் ஏன் கட்சியை விட்டு விலகுகிறேன் என்பதை விளக்கியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

மக்கள் நலம் பேண
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் மக்களுக்காக , நாட்டுக்காக , நம் சமுதாயத்திற்காக தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து , மக்கள் நலம் பேண வேண்டும் என்பது எனது விருப்பம். அந்த விருப்பத்தின் வடிகாலாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விளங்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியில் என்னை இணைத்துக்கொண்டு எனது மக்கள் பணியைத்தொடர்ந்தேன்.

ஜால்ரா அடிக்க முடியவில்லை
தற்கால அரசியல் சூழ்நிலையில் நியாயமற்றத்தன்மை, சுயநலப்போக்கை கடைபிடித்து , தலைமைக்கு " ஜால்ரா " தட்டிக் கொண்டு, இருந்தால் மட்டுமே இங்கு பயணிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் மக்களுக்கு, நாட்டுக்கு எதையும் செய்திட முடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன்.

பெயரளவில் மட்டுமே சமத்துவம்
மேலும் சமத்துவம் என்பதைப் பெயரளவில் மட்டுமே வைத்துவிட்டு இயங்கும் இக் கட்சியில் என்னை இணைத்து , என் சுய கருத்துக்களுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டு என்னால் தொடர்து இருக்க முடியாத நிலையில் , அக்கட்சியிலிருந்து விலகி உண்மையாக , நேர்மையாக , தன்மானத்தோடு மக்கள் பணி செய்யவே விருப்பப்படுகிறேன்.

விலகி விட்டேன்
அதனால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச்செயலாளர் மற்றும் ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும்,கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகுகிறேன் என்று கூறியிருந்தார்.

நீக்கிய சரத்குமார்
இந்த நிலையில் சரத்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஜெமிலாவை கட்சியை விட்டு நீக்குவதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த திருமதி.மா.ரா.ஜெமிலா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கட்சிக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டும் வந்துள்ளார்.

நடவடிக்கையை உணர்ந்து
இந்நிலையில் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து, சமூக வலைத்தலங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாக சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் திருமதி மா.ரா.ஜெமிலா மாநில மகளிரணி துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஆலந்தூர் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

இன்னொருவரும் நீக்கம்
மேலும் இதே அடிப்படையில் நிதி ஆலோசகர் பொறுப்பு வகித்து வந்த டாக்டர் ராஜசேகர் அவர்களும் அப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இருவருடனும் யாரும் கட்சி சம்பந்தப்பட்ட எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகள்
டாக்டர் ஜெமிலா குறித்து இதுவரை அதிகம் அறிந்திருக்கவில்லை பொதுமக்கள். தற்போது அவரது பெயரும் பிரபலமாகியுள்ளது. அவர் குறித்த அறிய.. அவரே தனது வாழ்க்கை வரலாற்றை விவரித்துள்ளார்.. இங்கே போய்ப் பார்க்கலாம்... http://www.marajemela.com/about-me.php


Click it and Unblock the Notifications
