ஓரே "அடி"... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன சசிகலா புஷ்பா!
சென்னை: ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்.... என்னை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுகிறார் என்று ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய சசிகலா புஷ்பாவின் பெயர் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் குட்புக்க்கில் இடம் பிடித்து விட்டால் என்ன வேண்டுமானாலும் கேட்காமலேயே வந்து சேரும். அதே நேரம், பேட் புக்க்கில் இடம்பிடித்து விட்டால் அவ்வளவு தான் அடுத்தடுத்த அடிகள், இடியாக வந்து சேரும்.
அதிமுகவில் பொறுப்புகள் பறிக்கப்படுவதும், வழங்கப்படுவதும் சகஜம் தான். கீழ் மட்டத்தில் இருக்கும் ஒருவரை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்து அழகு பார்ப்பது. உச்சாணிக் கொம்பில் இருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து அழ வைப்பது அனைத்துமே ஜெயலலிதாவிற்கு கை வந்த கலை.
திமுகவினர் மட்டுமல்ல அதிமுக-வினரே சசிகலா புஷ்பா மீது சரியான கடுப்பில் தான் இருந்துள்ளனர். இவருக்கு 2014ம் ஆண்டு எம்பி பதவி கொடுக்கப்பட்ட போதே, தூத்துக்குடி வட்டார அதிமுகவுக்குள் ஒரே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளால் சசிகலா புஷ்பாவை சிறிது சிறிதாக ஓரம் கட்டிய ஜெயலலிதா அதிமுக மகளிரணி செயலாளர் பொறுப்பிலிருந்து கட்டம் கட்டி கடந்த ஜனவரி மாதத்தில் தூக்கி எறிந்தார்.
அப்போதே அவரது எம்பி. பதவி பறிக்கப்படும் என்றும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எப்போதும் வேண்டுமானாலும் தூக்கி எறியப்படுவார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. 7 மாதத்திற்குப் பின்னர் தற்போது ஜெயலலிதாவின் பதவியை பறித்துள்ளார் ஜெயலலிதா.

விமானநிலைய சர்ச்சை
திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக எழுந்த சர்ச்சை புதிய வடிவத்தை எடுத்து, அகில இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. டெல்லி விமான நிலைய தாக்குதலைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் இன்று திருச்சி சிவாவிடமும் திமுக தலைவரிடமும் மன்னிப்புக் கேட்டார்.

அடிக்கும் உரிமையில்லை
திருச்சி சிவா, நாகரீகமானவர். உணர்ச்சிவசத்தில் அவரை அறைந்ததற்காக அவரிடமும் திமுக தலைவர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். ஜெயலலிதா எனக்கு எம்.பி பதவி அளித்தார். அதற்காக அவரை மதிக்கிறேன். ஆனால், எனக்கு பதவி வழங்கினார் என்பதற்காக என்னை அடிக்கும் உரிமை அவருக்கு இல்லை.

நான் அஞ்சமாட்டேன்
இந்தச் சம்பவம் தொடர்பாக போயஸ் கார்டனுக்கு அழைத்த அவர், என்னை ராஜினாமா செய்யச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். என்னை ஜெயலலிதா அறைந்தார். யாருடைய மிரட்டலுக்கும் நான் அஞ்சமாட்டேன். என் பதவியையும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.

அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம்
என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி சசிகலா புஷ்பா கண்ணீர் விட்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவிக்க, அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

குலாம் நபி ஆசாத்
இந்த குழப்பத்துக்கு மத்தியில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், யாருக்கு வேண்டுமென்றாலும் இது நடக்கலாம். ஆகவே, அந்த பெண் உறுப்பினரை பேச அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு முன் வரவேண்டும் என்றார்.

வெங்கையா நாயுடு
பாஜக உறுப்பினரான வெங்கய்யா நாயுடு பேசும்போது, "உறுப்பினரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. அவருக்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறது என அவர் கருதினால் சபாநாயகரிடம் முறையிட்டால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும்" என்றார். இதையடுத்து ராஜ்யசபா துணைத்தலைவர் குரியன், "சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.

டுவிட்டரில் டிரெண்ட்
சசிகலா புஷ்பா என்ற பெயர் கடந்த சனிக்கிழமை விமான நிலையத்தில் திருச்சி சிவாவை அடித்தது முதலே பேசப்பட்டு வருகிறது. இப்போது ராஜ்யசபாவில் ஜெயலலிதாவைப் பற்றி பரபரப்பாக குற்றம் சாட்டியதை அடுத்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார் சசிகலா புஷ்பா.
|
சூரி காமெடி
இது ஒருபுறம் இருக்க வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட காமெடியான சூரியின் புஷ்பா புருஷன் காமெடியை பதிவிட்டு தற்போது டிரென்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications