சசிகலா வருகையால் எதுவும் நடக்கலையே.. ஏழுமலை கதிதான் நமக்குமா? புலம்பும் உறவுகள்
சசிகலா பரோலில் வந்து சென்ற நிலையில் அரசியல் ரீதியாக எந்த முன்னேற்றமும் இல்லாதது அவராது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
Recommended Video

சென்னை: சசிகலா வருகையால் அதிமுகவுக்குள் ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மன்னார்குடி உறவுகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஏழுமலை மீதான தாக்குதலின் மூலம் உணர்த்திவிட்டார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது எனவும் விவாதித்துள்ளனர்.
கூவத்தூர் ஆப்ரேஷன் மூலம் அ.தி.மு.க ஆட்சியைக் கொண்டு வந்த சசிகலாவால், குடகு ஆப்ரேஷன் மூலம் ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எடியூரப்பா வழக்கைப் போலவே, நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என தினகரன் ஆதரவாளர்கள் நம்பியுள்ளனர்.

பாயும் வழக்குகள்
அதேநேரம், தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் மீது பாய்ந்துள்ள தேசத் துரோக வழக்கும் தினகரன் மீது பாய்ந்துள்ள வழக்குகளும் மன்னார்குடி தரப்பினரை அதிர வைத்துள்ளது. ஆட்சி உருவாக சசிகலாதான் காரணம் என்பதில் செல்லூர் ராஜு உள்ளிட்ட எங்கள் ஆதரவு அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். வெளிப்படையாகவே தங்களுடைய ஆதரவையும் ஒரு சிலர் அளித்துள்ளனர்.

அமைச்சர்கள் சந்திக்க மறுப்பு
சசிகலா குடும்பத்தின் மீது கரிசனம் காட்டினால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மற்ற அமைச்சர்கள் அமைதியாக உள்ளனர். மேற்கு மண்டலத்தில்தான் எங்கள் குடும்பத்துக்கு அதிக எதிர்ப்பைக் காட்டுகின்றனர். சசிகலா வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என நம்பியிருந்தோம். அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை. ஆதரவு கொடுக்க நினைத்தவர்கள்கூட, மறைமுகமாக ஆட்களை அனுப்பி பேசியுள்ளனர். முதல்வர் மீதான பயத்தில்தான் இவ்வாறு செயல்படுகின்றனர் என்பதையும் சசிகலா உணர்ந்து வைத்திருக்கிறார்.

எதிர்த்து பேசினால் தாக்குதல்
அதேநேரம், இதுநாள் வரையில் எங்களை ஆதரித்த நிர்வாகிகள்கூட எதிர்முகாமுக்குச் செல்வதைத்தான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். அத்துடன் முதல்வர் தரப்பினரால் எங்கள் ஆதரவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதெல்லாம் வழக்குப் போடுகின்றனர். பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை வீட்டை சூறையாடிவர்கள், அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவரது உதடுகள் கிழிந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சசிகலாவால் மவுனமான தினகரன்
இது எங்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறோம். முன்பெல்லாம், முதல்வர் தரப்பில் இருந்தோ ஓபிஎஸ் தரப்பில் இருந்தோ ஏதாவது விமர்சனம் வந்தால் உடனுக்குடன் பதில் கொடுப்பார் தினகரன். சசிகலா வருகைக்குப் பிறகு அவரது நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அனைத்தையும் அமைதியாக கவனித்து வருகிறார்.

சசி குடும்பம் மீது ஆக்ஷன்
அரசுக்கு எதிராக சசிகலா தரப்பினர் செயல்படுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டாலே வழக்குப் பதியுமாறு ஆளும்தரப்பில் இருந்து உத்தரவிட்டுள்ளனர். இதனால், குடும்ப உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கூறியிருக்கிறார் சசிகலா. 2011ம் ஆண்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய ஐ.பி.எஸ் ஆபரேஷன், தற்போது வேகம் பெற்றுள்ளதாக குடும்பத்தினர் கருதுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

கைது நடவடிக்கைகள் எப்போது?
அத்துடன் முதல்வர் தரப்பில் இருந்து காவல்துறைக்கு முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. ஆட்சிக்கு எதிராக இருந்தாலும் எந்தச் செயலிலும் இறங்காமல் அமைதியாக இருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அதேநேரம், பொதுமேடைகளில் அரசுக்கு எதிராக அவதூறு பேசுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க வேண்டாம்' எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து, எதிர் முகாமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் துல்லியமாக கவனித்து வருகின்றனர். சசிகலா தரப்பின் நடவடிக்கையைப் பொறுத்தே கைது சம்பவங்கள் அரங்கேறும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications