ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு தடை இல்லை.. உச்ச நீதிமன்றம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை:அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் தினகரன் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில்அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல் செய்யும் வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி எச்.ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அமர்வு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில்தான் இதுதொடர்பாக திருத்தம் கொண்டு வர முடியும். இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. எனவே அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் தேவையில்லாமல் தலையிட முடியாது. என்று கூறியிருந்தது.
இதனையடுத்து ஜோசப் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தினகரன் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜோசப் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் தேர்தல் களத்தில் தினகரன் போட்டியிடுவதில் சிக்கல் எழாது என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications