தேசியக் கல்விக் கொள்கை Vs மாநில கல்விக் கொள்கை! அரசின் சாய்ஸ் எது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
குழுவின் அறிக்கையை பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை அரசு வகுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு;

தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிகழ்காலச் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையினை வகுக்க தமிழ்நாடு அரசு உறுதிப் பூண்டுள்ளது.
இதற்கென, மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) முருகேசன் அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து 01.06.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. மேற்காணும் நோக்கத்திற்கிணங்க, கடந்த ஓராண்டு காலமாக இக்குழு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட கள அளவில் கல்வி சார்ந்து செயல்படும் அனைவரிடமும் பொது கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். அத்துடன் ஆசிரியர் சங்கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டப் பலருடனும் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இவற்றைக் கடந்து, நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்காக அரசின் பல்வேறு துறைகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இக்கலந்துரையாடல்கள் குறிப்பாக கல்விக் கொள்கையின் தாக்கத்தை செயல்பாட்டுத் தரப்பிலிருந்து புரிந்து கொள்ளும் முனைப்புடன் நடத்தப்பட்டன. பல்வேறு அரசு துறைகளின் செயலாளர்கள் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களையும் தரவுகளையும் குழுவின் முன் நேரில் விளக்கி அறிக்கையாக அளித்தனர்.
அரசு துறைகளுடன் நடந்த கலந்துரையாடல்கள் மிகவும் வெளிப்படையான முறையில் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) முருகேசன், தலைமையில், தமிழ்நாட்டிற்கென ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குழு செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழுவின் செயல்பாடுகள் மீது அரசு முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த உயர்மட்டக் குழுவில் கீழ்க்காணும் இரு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது:-
1. டாக்டர் டி. ஃப்ரீடா ஞானராணி, முதல்வர் (ஓய்வு), காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, சென்னை.
2. டாக்டர். ஜி. பழனி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி குழு 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும்.
குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கென சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும்.
அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கோடு சமச்சீர் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடைபோடும் நமது அரசு, மாநில உரிமைகளைக் காக்கும் விதத்தில் தொடர்ந்து செயலாற்றும்.












Click it and Unblock the Notifications