பல லட்சம் சீமானை உருவாக்கி இருக்கிறேன்- அதிமுக, திமுகவுக்கு கடைசி ஆட்டம் தம்பீ... சீமான் 'பொளேர்'
சென்னை: எதிர்வரும் சட்டசபை தேர்தலே அதிமுக, திமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் தம்மைப் போல பல லட்சம் சீமானை தாம் உருவாக்கியிருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நியூஸ் 7 தொலைக்காட்சி லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு அம்சங்களை முன்வைத்து கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டது.

இது தொடர்பான நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியதன் தொகுப்பு:
நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன்.. தொடக்கத்தில் காங்கிரஸுக்கு வாக்களித்தோம். பின்னர் மொழி, இன உரிமை அடிப்படையில் நான் திமுகவுக்கு வாக்களித்தேன்.
தற்போது மாற்று அரசியல் தேவை என்ற சிந்தனை இருக்கிறது. இருபெரும் திராவிடர் அரசியல் கட்சிகள் மீது சலிப்பு வந்துவிட்டது. லஞ்சம், ஊழல் என்பது தேசியமயமாக்கப்பட்ட ஒன்றாகி கிடக்கிறது.
இங்கே ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர ஆட்சி முறையில் எந்த மாற்றமும் வரவில்லை. இதனைத்தான் நாங்கள் சுட்டி காட்டுகிறோம். இதுதான் இளைஞர்களிடத்தில் ஏக்கமாகவும் இருக்கிறது.
பல்வேறு சமூக நலன் சார்ந்த அமைப்புகள் இருந்தபோதும் அவை மாற்று அரசியலுக்கு வராமல் போய்விட்டன... இதனால் வேறு ஒரு மாற்று அரசியல் இங்கே வந்துவிட்டது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஒரு மதம் போல.. நோயாக இருக்கிறது. ஜாதி மாறி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு கூட இங்கே வாழ்ந்துவிட முடியும்.
ஆனால் திமுக- அதிமுகவினர் இடையே திருமணம் செய்து கொண்டு வாழ முடியாத அளவுக்கு மதமாக மாறிவிட்டது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே அவரவர் நாட்டில் அவரவர் வாழனும்; அவரவர் நாட்டில் அவரவர் ஆளனும் என்பதற்காகத்தான்.. .ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லையே...
சிங்கப்பூரில் அந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்தான் ஆளனுமே தவிர தமிழர் எதற்கு ஆளனும்? பெங்களூருவில் 90% பேர்... ஒன்றேகால் கோடி பேர் தமிழர்கள்.. ஆனால் அங்கே தமிழர் ஆள முடியுமா?
இங்கே யாரும் வாழலாம்.. ஆள்வது தமிழர்தான்... தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் முதல்வராக முடியாது; ஆந்திராவின் சந்திரசேகரராவ் தெலுங்கானாவில் முதல்வராக முடியாது.
நாட்டின் பிரதமராக ராகுல் காந்தியால் வரமுடியும்.... ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக ராகுல் காந்தியால் வந்துவிட முடியாது.
கர்நாடகாவிலும் கேரள்விலும் காங்கிரஸே ஆள்கிறது.. அதற்காக கர்நாடகாவில் உம்மன்சாண்டியை ஆளவிட்டுவிடுவார்களா?
தமிழகத்தைப் பொறுத்தவரை தகப்பன் இல்லாத வீடாக, தலைவன் இல்லாத நாடாக இருக்கிறது.. அதனால்தான் நியூட்ரினோவை தேனி மலையில் கொண்டு குடைகிறார்கள்.
இந்த நாடு தமிழ்நாடு... இங்க தமிழர் முன்னேற்ற கழகம்தான் இருக்கனுமே தவிர திராவிட முன்னேற்றம் எதற்கு? வைகோவின் மதிமுக, ஒரு மறுபடியும் திமுகதானே...
அதிமுக, திமுகவுக்கு எந்த கொள்கையில் வேறுபாடு இருக்கு? எல்லாவற்றுக்கும் ஒரே தத்துவம் ஒரே மொழி கொள்கைதானே..
இந்த தேர்தல் அதிமுக, திமுகவுக்கு கடைசி ஆட்டம் தம்பீ... மக்கள் அவ்வளவு சலிப்பில் இருக்கிறார்கள். சகாயம் ஒருவர் வந்துவிட்டால் பிரச்சனை எதுவும் தீர்ந்துவிடாது..
இது 50 ஆண்டுகால அழுக்கு... அவ்வளவு எளிதாக ஒரே நாளில் அகற்றிவிடமுடியாது. ஒவ்வொருவரும் சகாயமாம மாறனும்.. நான் ஒரு சீமான் இல்லை... பல லட்சம் சீமானை உருவாக்கி இருக்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications