கத்துக்குட்டிகள் போல செயல்பட்ட அதிமுக வக்கீல்களால் ஜெ.வுக்கு நஷ்டம் -சட்ட நிபுணர்கள்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் எடுத்த எடுப்பிலேயே ஜாமீன் கிடைத்திருக்கும். சட்ட விதிகள் அவருக்கு சாதகமாகத்தான் இருந்தன. ஆனால் அதிமுக வக்கீல்கள் செய்த தவறு மற்றும் குழப்பங்கள், அவசரப்பட்டதன் காரணமாகத்தான் ஜெயலலிதா உள்பட யாருக்குமே ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டதாக பிரபல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டதுதான் மிகப் பெரிய தவறு. இதனால்தான் அனைத்தும் சாதகமாக இருந்தும் நீதிபதி ஜாமீன் வழங்காமல் நிராகரித்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
முதலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஜாமீன் கோரியிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்கும். அவரது உடல் நிலை, அவர் வகித்து வந்த பதவி, சமூகத்தில் அவருக்கு உள்ள அந்தஸ்து உள்ளிட்டவற்றை தெளிவாக ஹைலைட் செய்யாமல் விட்டு விட்டனர். இதுவும் கூட ஒரு தவறுதான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுதாகரனுக்குப் போய் கேட்கலாமா
இதுகுறித்து முதுபெரும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியபோது, நான்கு பேருக்கும் சேர்த்து ஜாமீன் கோரியது பெரும் தவறு. அதிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் சுதாகரனுக்குப் போய் ஜாமீன் கேட்டது மிகப் பெரிய தவறு.

லாஜிக்கே இல்லையே
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டால் சரி. நியாயம் இருக்கிறது. அவரது உடல் நிலையில் பிரச்சினைகள் உள்ளன. கேட்கலாம். உரிமையும் இருக்கிறது. ஆனால் சுதாகரனுக்கு கேட்டதில் லாஜிக்கே இல்லையே.

யார் பலவீனமோ அவர்களுக்கே முன்னுரிமை
ஒரு வழக்கில் பல குற்றவாளிகள் இருக்கும்போது அவர்களில் யாருக்கு முன்னுரிமை கொடுத்து ஜாமீன் கேட்க வேண்டும் என்பதை வக்கீல்கள்தான் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் ஜாமீன் கிடைக்க வழி உள்ளது. மாறாக அனைவருக்கும் சேர்த்து கேட்பது சரியாக இருக்காது.

ஜெயலலிதாவுக்கே முதலில் கேட்டிருக்கலாம்
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் வயதில் மூத்தவர். உடல் ரீதியாகவும் மற்றவர்களை விட பலவீனமானவர். சமூகத்திலும் நல்ல அந்தஸ்தில் இருந்தவர். இதையெல்லாம் சரிவர ஹைலைட் செய்யாமல் விட்டு விட்டனர் அதிமுக வக்கீல்கள். இது பெரும் தவறு. அவருக்கே முதலில் ஜாமீன் கேட்டிருக்க வேண்டும்.

நிச்சயம் கிடைத்திருக்கும்
ஜெயலலிதாவுக்கு முதலில் ஜாமீன் கோரி, அவரது உடல் நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி, அதை நிரூபித்து, சமூக அந்தஸ்தை கோர்ட்டுக்கு சரிவர புரிய வைத்திருந்தால் நிச்சயம் அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கும்.

சுதாகரனுக்கு சான்ஸே இல்லை
ஆனால் சுதாகரனைப் பொறுத்தவரை அவர் வயதில் இளமையானவர், நல்ல திடகாத்திரமாகவும் இருக்கிறார். மற்ற குற்றவாளிகளை விட நல்ல நிலையிலும் இருக்கிறார். எனவே எடுத்த எடுப்பிலேயே அவருக்கு எந்த நீதிபதியும் ஜாமீன் கொடுக்க மாட்டார்.

ஜெயலலிதாவை முதலில் எடுத்திருக்கலாம்
எனவே முதலில் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்து விட்டு மற்ற மூவரையும் படிப்படியாக எடுக்க முயற்சித்திருக்கலாம்.

ஏன் அவசரப்பட்டார்கள் என்று புரியவில்லை
ஆனால் ஏன் எடுத்த எடுப்பிலேயே நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி அதிமுகவினர் அவசரப்பட்டு கோட்டை விட்டார்கள் என்று புரியவில்லை என்று கூறியுள்ளார் இந்த சட்ட நிபுணர்.

2 நாளில் மனு தாக்கல்.. ஓவர் ஓவர்!
இன்னொரு முதுபெரும் வழக்கறிஞர் கூறுகையில், முதலில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கொடுத்த தீர்ப்பைப் படிக்கவே பலநாட்களாகும். காரணம், அது மொத்தம் 1136 பக்கங்களைக் கொண்டது. தீர்ப்பு வெளியான 2 நாட்களிலேயே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டனர். இது மிக மிக தவறு.

அடுத்தடுத்து அவசரம்
தீர்ப்பை சரிவர படிக்காமலேயே அவர்கள் ஜாமீன் கோரியுள்ளனர். முதலில் அதை விடுமுறை கால நீதிபதி தள்ளி வைத்ததும், அடுத்து மீண்டும் அவசரப்பட்டு தலைமை நீதிபதியை அணுகி வேகமாக விசாரிக்க வலியுறுத்தியுள்ளனர். இதுவும் தவறு. 2வது முறைும் இதனால்தான் வழக்கை நீதிபதி விசாரிக்காமல் ஒத்திவைத்து விட்டார்.

கத்துக்குட்டிகள் போல இருக்கிறார்கள்
அதிமுக வக்கீல்களைப் பார்த்தால் யாருமே சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் போலவே இல்லை. கத்துக்குட்டிகள் போல நடந்து கொண்டுள்ளனர். ஒரு நீதிபதி ஒத்திவைத்த வழக்கை சீக்கிரமாக விசாரியுங்கள் என்று நீதிமன்ற பதிவாளரைப் போய் வலியுறுத்தியுள்ளனர். அவர் எப்படி நீதிபதியின் பணியில் தலையிட முடியும். இது கூடவா வக்கீல்களுக்குத் தெரியாது என்றார் அவர்.

உடல் நிலையைத்தான் காரணம் காட்டியிருக்க வேண்டும்
இன்னொரு மூத்த வழக்கறிஞர் கூறுகையில், முதலில் அதிமுக வக்கீல்கள் அனைவருமே டெக்னிக்கலாக பல தவறுகளைச் செய்துள்ளனர். அது ஜெயலலிதாவுக்குப் பாதகமாக போய் விட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலையை அவர்கள் முக்கியப்படுத்தி வாதிடவே இல்லை.

நீதிபதியின் உரிமை
ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்பது முழுக்க முழுக்க நீதிபதியின் உரிமையாகும். அதில் யாருமே தலையிட முடியாது.

தேவையில்லாமல் குன்ஹாவை விமர்சித்து
ஆனால் ஜெயலலிதா வழக்கில், அவருடைய உடல் நிலைப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கோரியிருக்கலாம். அது நிச்சயம் பலன் கொடுத்திருக்கும். ஆனால் அதை விட்டு விட்டு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எடுத்துக் கொண்டு வாதாடியிருக்கிறார்கள். இதனால்தான் பலன் கிடைக்காமல் போய் விட்டது என்றார் அவர்.

ராம்ஜேத்மலானியால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை
உண்மையில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியே கூட அதிமுக வக்கீல்களின் அவசரக்குடுக்கைத்தனத்தைப் பார்த்து குழம்பிப் போயிருப்பார். 2வது முறை ஜெயலலிதா ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டதும், உடனடியாக மீண்டும் விசாரணையை சீக்கிரம் நடத்தக் கோரி பதிவாளரிடம் போய் அதிமுக வக்கீல்கள் மனு கொடுத்தபோது, ராம்ஜேத்மலானி முதலில் அதை திரும்பப் பெறுங்கள் என்று உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

முதலில் நல்ல வக்கீல்கள் தேவை
எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது என்பதை விட முக்கியமானது, முதலில் அவருக்கு நல்ல வக்கீல்கள் குழு தேவை என்பதே.












Click it and Unblock the Notifications