மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து- வேன் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியை அடுத்த மணற்கேணி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் திருச்சி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முப்புலியான் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த சென்றனர். அப்போது காரணிபட்டி விலக்கு ரோடு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினிவேனில் வந்த ராம்குமார் , ரத்தினம், பொன்னர், நல்லையா , சுப்பம்மாள், பொன்னம்மாள், முருகேசுவரி உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மினி வேனில் வந்த படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications