எஸ்.பி.பட்டினம் காவல்நிலைய துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட படுகொலை- மமக, இந்திய தவ்ஹீத் ஜமாத், கண்டனம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் விசாரணை கைதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு ம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள மனித நேய மக்கள் கட்சித் தலைவரும்,ராமநாதபுரம் தொகுதி எம்.எல்ஏவுமான எம்.ஹெச். ஜவாகிருல்லா, இது திட்டமிட்ட படுகொலை என்று தெரிவித்தார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம் பாக்கர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

SI guns down youth in police station in Ramanathapuram: MMK condemns death

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த மெக்கானிக் அருள்தாஸ் என்பவர் கொடுத்த ஒரு புகார் தொடர்பாக எஸ்.பி பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சைய்யது முஹம்மது என்பவரை காவல் நிலைய துணை ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.

விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நியாயப்படுத்த முடியாத துணை ஆய்வாளர் காளிதாஸின் இந்த செயலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

விசாரணைக்காக ஒருவரை அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் எதையும் பொதுவாக காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகும்.

அப்பட்டமான கொலையை நியாயப்படுத்தும் வகையில், சைய்யது முஹம்மது கத்தியால் துணை ஆய்வாளர் காளிதாசை குத்தியதால் தன்னை தற்காத்துக்கொள்ள காளிதாஸ் அவரை துப்பாக்கியால் சுட்டார் என்கிறது காவல்துறை.

இந்த சம்பவம் நடைபெற்ற சூழலில் வேறு காவலர்களும் காவல்நிலையத்தில் இருந்துள்ளனர். இருந்தும் கத்தியால் குத்த முயற்சித்த சைய்யது முகம்மதுவிடமிருந்து கத்தியைப் பிடுங்கவோ, அவரை மடக்கிப் பிடித்து கைது செய்ய முயற்சிக்காமல் துப்பாக்கி பிரயோகம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது நேர்மையான விசாரணை நடத்தி, சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதியாமல் அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். பலியான சைய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக இதுபோன்ற சம்பவங்களின்போது, குற்றச் செயலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியை பாதுகாக்கும் வகையில்தான் காவல்துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் திறந்த நிலை விசாரணை நடத்தி அறிக்கைகள் மூலம் சுட்டிக் காட்டியுள்ளன.

இதுபோன்ற காவல் மரணங்களின் பல வழக்குகளில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன.

காவல்துறையின் இத்தகு நடவடிக்கைகள் காவல்துறை அதிகாரிகளின் குற்ற நடத்தையை தடுக்காது என்பதை காவல்துறை தலைமை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவாறு குற்றத்தில் ஈடுபடும் அதிகாரிகளை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

"காவல்துறையினர் அறிவுப்பூர்வமான, அறிவியல்பூர்வமான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; பொது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்'' என காவல்துறை தொடர்பான நிகழ்சிகளில் பங்கேற்கும் தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாக உள்ளது.

காவல் மரணங்கள் அதிகம்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காவல் மரணங்கள் அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என்பது கவனத்திற்குரியது. தமிழக காவல்துறை தலைமை காவல்துறை அதிகாரிகளின் குற்றச் செயல்களை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது என்று எஸ்.எம். பாக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மனு

இதனிடையே இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,பொதுசெயலாளர் செய்யது இக்பால்,மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் இன்று(15.10.14) தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் அவர்களை சந்தித்து செய்யது முஹம்மது என்ற இளைஞரை படுகொலை செய்த எஸ்.பி.பட்டிணம் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.மனுவைப்பெற்றுக்கொண்ட கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி"உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எஸ்.எம்.பாக்கர் கூறுகையில்:படுகொலை செய்த சப் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும்,தவறினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட காவல்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியன் சோஷியல் ஃபோரம் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தை சேர்ந்த சையத் முகம்மது என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த மற்றொருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சையத் முகம்மதை கைது செய்து இராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் தனது துப்பாக்கியால் சையத் முகம்மதை சுட்டு கொன்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையின் போது சையத் முகம்மதுக்கும் உதவி ஆய்வாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை கத்தியால் குத்த முயன்றதால் தற்காப்புக்காக சையத் முகம்மதை சுட்டு கொன்றதாக கூறும் உதவி ஆய்வாளர் காளிதாஸின் கூற்று அப்பட்டமான பொய்யென்று கூறப்படுகிறது.

மூடி மறைப்பதா?

தன்னை கைது செய்யும் போது கத்தியால் குத்தாதவர்,60கிலோ மீட்டர் தூரம் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் போது கத்தியால் குத்த முயற்சிக்காதவர் காவல் நிலையத்தில் வைத்து குத்த முயற்சித்தார் அதனால் துப்பாக்கியால் சுட்டேன் என்ற காளிதாஸின் வாதம் திட்டமிட்ட என்கவுண்டர் படுகொலையை மூடி மறைக்கும் செயலாகும்.

இழப்பீடு வழங்குக

கொலைக்கு காரணமான உதவி ஆய்வாளர் காளிதாஸை கொலை வழக்கின் கீழ் கைது செய்து துறை ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதோடு,

கொலையுண்டவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதாக இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+