கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்க நடை மேம்பாலம்: ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து
சென்னை: தாம்பரம் கிழக்கு மேற்கு இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்டோ ஒட்டுநர்கள் , பள்ளி மாணவர்கள் , பொது நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னையை அடுத்த கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் மேம்பாலம் அருகில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. ரயில்வே கேட் மூடப்பட்டதால் அப்பகுதி வழியாக பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து நடந்து சென்று வந்தனர்.

இந்த நிலையில் ரயில்வே பணிகளுக்காக அப்பகுதியில் மதில் சுவர் கட்டப்பட்டதால் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரும் பொதுமக்கள் நடைபாதை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கு - கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில், நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இது குறித்து நகராட்சி கூட்டத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு செல்லவும், அங்கிருந்து, இங்கு வருவதற்கும் நடைமேம்பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லை. ஆபத்தான வகையில் தண்டவாளம் வழியாக வரும் நிலைமை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர், நடைபாதை, இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில், ஒரு பாதை அமைக்க திட்டமிடப்பட்டு ரயில்வே துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி கொடுத்தால், அடுத்த சில நாட்களில் பணிகள் துவக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தாம்பரம் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்டோ ஒட்டுநர்கள் , பள்ளி மாணவர்கள் , பொது நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமான பெண்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் தங்கள் கையெழுத்தினை பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications