சமரச பேச்சு... ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி, வேலுமணிக்கு நோ - தங்கத் தமிழ்ச்செல்வன்
சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி, வேலுமணி ஆகியோர் இல்லாமல் வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு வழங்கியதால் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து இரு தரப்பு விசாரணையும் முடிந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற பிப்ரவரி 8 அல்லது 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கருத்து கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், 18 சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாமல் போகிவிடும். தற்போது அதிமுகவிற்கு 115 உறுப்பினர்கள் ஆதரவு தான் உள்ளது.
எங்களுக்கு சாதகமாகத் தான் நிச்சயம் தீர்ப்பு வரும். அப்படி வந்தால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை காட்டவேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாங்கள் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவருக்கும் ஆதரவு தரமாட்டோம்.
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி இல்லாமல் வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அப்போது டி.டி.வி தினகரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவோம்.
ஒரு வேளை எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளோம்.
ஆளும் கட்சியில் இருந்து ஆட்சியை காப்பாற்ற எங்களுடன் சமரச பேச்சு நடப்பதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. எங்களுடன் யாரும் சமரசம் பேசவில்லை. நாங்களும் அதற்குத் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications