மாறப்போகும் ரயில்களின் வேகம்.. எந்தெந்த வழித்தடங்கள்.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு
சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்குள் 1,394 கி.மீ. தொலைவுக்கு பாதையை மேம்படுத்தி, ரயில்களை 110 கி.மீ. வரை வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கரூர்-திண்டுக்கல், போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் உள்பட ஏராளமான வழித்தடங்களில் பயண வேகம் விரைவில் அதிகரிக்க போகிறது.
இந்திய ரயில்வே ரயில்களில் வேகத்தை குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கிமீ மற்றும் குரூப்-பி வழித்தடத்தில் 130 கிமீ வேகத்திலும் இயக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்குகின்றன. பெரும்பாலான வழித்தடங்களில் 110 கிமீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேநேரம் பல்வேறு வழித்தடங்கள் இன்னும்110 கிமீவேகத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு தண்டவாள கட்டமைப்பு இருக்கிறது.

தற்போதைய நிலையில் தெற்கு ரயில்வேயில் 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவு ரயில்கள் வேகம் முன்பைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடங்கள் பின்வருமாறு:சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.அதற்காக சென்னை உள்பட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது நடந்து வருகிறது. மேலும் தமிழக ரயில் பாதைகளில் தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் அமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல் 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் தெற்கு ரயில்வேயில் 1,394 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மேம்படுத்தி 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.
எந்த பகுதியில் எல்லாம் 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது? : சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மெதுவான பாதை, கரூர்-திண்டுக்கல், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி-ராமேசுவரம், மதுரை-மானாமதுரை, கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை, விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-ஆலப்புழா, ஆகிய வழித்தடங்களில் ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் 110 முதல் 130 கிமீ வேகத்தில்செல்கின்றன. ஆனால் தமிழகம் முழுவதும் 130 கிமீ வேகத்தில் செல்லமுடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நிலையில் சென்னை முதல் ஜோலார்பேட்டை வரை, சென்னை முதல் விழுப்புரம் வரை 130 கிமீவேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இன்னும் ஆறு மாதத்தில் ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி சென்னை முதல் கோவை வரை ரயில்கள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், தற்போது கோவை செல்லும் நேரம் கணிசமான அளவு குறைந்துவிடும்.












Click it and Unblock the Notifications