விழுப்புரம்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற மூவர் கைது
விழுப்புரம்: தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொடூரமாக கொலை செய்து அவர்களின் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மூன்று பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி தமயந்தி, 38, கடந்த, 2012 பிப்ரவரியில், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உடல், கிணற்றில் வீசப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதேபோல கடந்த, 2012 நவம்பரில், நத்தாமூர் காப்புக் காட்டில், சுப்ரமணி மனைவி பொன்னம்மாள், 45, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமானது. இந்த வழக்கை திருநாவலுார் போலீசார் விசாரித்தனர்.
கடந்த, 2011 ஏப்ரலில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுாரில் மாடு மேய்க்க சென்ற கோவிந்தன் மனைவி நாவம்மாள், 32, மார்பு அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியிருந்தன. இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது.
குற்றவாளிகள் கைது
இந்த கொலை வழக்குகள் தொடர்பாக, பரிக்கல் கிராமத்தை சேர்ந்த மதியழகன், 29, என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவரது கூட்டாளிகள் ஆமூரைச் சேர்ந்த குருபாலன், 37, வடிவேல், 33, ஆகியோர் போலீசாரிடம் சரணடைந்தனர்.
திருட்டும் கொலைகளும்
பிடிபட்ட மூவரும், துவக்கத்தில், சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு, அந்த பணத்தில் பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். பின், தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மூன்று பேரையும், போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கணவன் தற்கொலை
இதனிடையே மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலபதி மனைவி சாந்தி, 40, கடந்த, ஜூலை மாதம் தேதி, வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த வழக்கில், மனைவி
கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டதாக எண்ணி, கடந்த ஆகஸ்ட், 8ம் தேதி, அவரது கணவர் வெங்கடேசன், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆனால், சாந்தியை இதே கும்பல்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளது. இந்த விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
நான்கு கொலைகளில்
சாந்தியின் சடலம் கிடைக்காததால், வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற நான்கு வழக்குகளில், கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கியுள்ளதால், பல பகுதி போலீசாரும், தங்கள் பகுதி கொலை சம்பவங்களில், துப்பு கிடைக்குமா என, விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை போலீசார்
இவ்வழக்கில் குற்றவாளிகளை பிடித்த திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிளான தனிப்படையினரை மாவட்ட காவல்துறை அதிகாரி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications